தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேனுக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, பெருந்தோட்ட காணிகளை குத்தகைக்கு வழங்குவது சம்பந்தமாக எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, பெருந்தோட்ட காணிகளை பல நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்க வேண்டும் என இருத்தரபினரும் கலந்துரையாடினர்.
மேலும் மனோ கணேசன் மலையக மக்கள் பாதிப்படையும் எந்த ஒரு வேலைத்திட்டத்திற்கும் தான் இடமளிக்க மாட்டேன் என்றும், மலையக மக்கள் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் என இக்கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் போது இருதரப்பினரும் கடந்த காலங்களில் குத்தகைக்கு வழங்கியதற்கான காரணம், குத்தகை விடயத்தில் கம்பனிகள் பின்பற்றாத விடயங்கள் மற்றும் குத்தகைக்கு வழங்கும் போது பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் சாதகமான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன் போது இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமான்
1.தேயிலை உற்பத்தி செய்யும் காணி, தொழிற்சாலைகள் ஆகியவற்றை மாத்திரம் குத்தகைக்கு வழங்க வேண்டும். தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சுற்றியுள்ள 25 எக்டர் காணிகளை குத்தகைக்கு வழங்குவதை தவிர்த்து, குத்தகையையை புதுப்பிக்கும் போது அக்காணியை எதிர்காலத்தில் வீடமைப்பு திட்டம், தோட்ட புறங்களில் நவீன அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த கூடிய வகையில் குடியிருப்புடன் 25 எக்டர் காணியை பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் கம்பனிகளின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் கிடையாது. மேலும் கோவில்,பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், பாலர் பாடசாலை, வைத்திய சாலை, லயன் குடியிருப்புகள் ஆகியவற்றை தவிரத்து தான் குத்தகைக்கு வழங்க வேண்டும்.
2.குத்தகைத் தொகையை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்தல்
பெருந்தோட்டக் காணிகளை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கும்போது அறவிடப்படும் குத்தகைத் தொகையானது, தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காணியின் சந்தை மதிப்பீட்டைக் கருத்திற்கொண்டு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டு அதிகரிக்க வேண்டும்.
- தொழிலாளர்களின் சம்பளத்தை வருடாந்தம் அதிகரித்தல்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை என்ற நடைமுறைக்குப் பதிலாக, ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கப்படக்கூடிய வகையில் குத்தகையுடன் புதிய ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்த அதிகரிப்பு என்பது கம்பனிக்கு அதிக சுமையாக இருக்காது, தொழிலாளர்களின் வாழ்வாதார சுமையும் குறைவடையும்.
- சம்பள பேச்சுவார்த்தையை தற்போது தொழில் அமைச்சு தான் பேசுகிறது. காணிகளுக்கு அரசு சொந்தம் என்பதால் பெருந்தோட்ட அமைச்சும் சம்பள பேச்சுவார்த்தையில் எதிர்காலத்தில் பங்காக இருக்க வேண்டும் என்பதைக் குத்தகை ஒப்பந்தத்திற்குள் உள்ளடக்க வேண்டும்.
- தோட்ட புறங்களில் இருக்கும் தரிசு நிலங்களில் உற்பத்தியை மேற்கொள்வதாக கம்பனிகள் குத்தகைக்கு எடுத்தனர்.ஆனால் அவர்கள் அதை முறையாக உற்பத்தி செய்யவில்லை. அவ்வாறு உற்பத்தி செய்யப்படாத பகுதிகளை அரசு மீண்டும் குத்தகைக்கு வழங்காமல், அந்த பகுதியை தோட்ட புறங்களில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் செய்ய வழங்க வேண்டும்.
- சம்பள நிர்ணயத்திற்கான புதிய அமைப்பை உருவாக்குதல்
தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு, வாழ்வாதாரத் செலவுகள், அன்றைய பொருளாதாரச் சூழ்நிலை, உலக சந்தியில் தேயிலை விற்பனையின் நிலவரம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளின் இலாபம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு சம்பளத்தைத் தீர்மானிப்பதற்காக பெருந்தோட்ட அமைச்சை அதில் உள்ளடக்க வேண்டும்.
- பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலையை விடுத்து, வருமான வரக்கூடிய நட்சத்திர விடுதிகள் போன்ற தொழில்களை முன்னெடுக்கும் இடங்களுக்கான குத்தகை தொகை தேயிலை காணியை விட அதிகமாக இருக்க வேண்டும்.
எனவும் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய கட்சியினருடன் இது தொடர்பாக கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, அரசாங்கத்திடம் முழுமையான முன்மொழிவுகளை முன்வைக்கலாம் என்று கலந்துரையாடப்பட்டது.
தகவல் – செந்தில் தொண்டமானின் ஊடக பிரிவு




