கடும் மழை காரணமாக வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மழையினால் அந்தந்த மாகாணங்களில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல அரச பாடசாலை கட்டிடங்களில் நலன்புரி முகாம்கள் நடாத்தப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, வடக்கில் தற்போது இயங்கிவரும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காசல்ரி நீர்தேக்க பகுதிகளில் (18ஆம் திகதி) பெய்த கடும் மழையுடன், காசல்ரி நீர்த்தேக்கம் (19ஆம் திகதி) நிரம்ப ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கமைவாக களனிகாவின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழிவதைத் தொடர்ந்து விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என மின் உற்பத்தி நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆதரவை வழங்குமாறு அனைத்து அமைச்சர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சி என்ற ரீதியில் இவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பெரமுன கூறுகின்றது.
அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால், நிறைவேற்று சபையை கூட்ட வேண்டும் எனவும், கடந்த சனிக்கிழமையின் பின்னர் நிறைவேற்று சபை கூடவில்லை எனவும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் பதின்மூன்று உறுப்பினர்களும் ஒரே கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சுவதாகவும் இதன் காரணமாகவே அவர் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் சுதந்திர மக்கள் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.பி டிலான் பெரேரா இன்று (18) தெரிவித்தார்.
நாவல சுதந்திர மக்கள் சபையின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் சபையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும், ரணில் - ராஜபக்ச அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டு சேர்வதை காலம் தாழ்த்துவது சிறந்ததல்ல என தெரிவித்த டிலான் பெரேரா, எதிர்காலத்தில் இரண்டு மூன்று பேர் அமைச்சு பதவிகளுக்கு கனவு காண்பவர்கள் சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
சாகர காரியவசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் மக்கள் போராட்ட இயக்கம் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.
பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பு படையினர் சாலையை மறித்ததால் அவர்களால் அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை.
பின்னர் சாலை முன் மறியல் செய்தனர்.
புன்னாக்கு வாளியுடன் நடந்து சென்று இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அறிக்கையின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் கட்சியின் முடிவுகள் மற்றும் அதிகாரங்கள் இந்த தலைமை வாரியத்திற்கு சொந்தமானது.
தலைமைத்துவ சபை நியமனம் காரணமாக சில பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ருவான் விஜேவர்தன, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ, நவீன் திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனிடையே, பொதுச் செயலாளர் பதவியும் விரைவில் மாற்றப்பட உள்ளது.
இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனமான Lanka Spice (Pvt) Ltd, Senehase Dath (அன்பின் கரங்கள்) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் சமூகப் பொறுப்புணர்வை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்துள்ளது.
கல்வியை ஆதரிப்பதில் விசேட கவனம் செலுத்தி, சமூகத்திற்கு அர்த்தமுள்ள வழிகளில் மீளக் கொடுப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.
Senehase Dath நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது, அண்மையில் அத்துருகிரிய, மே.மா /ஜயா / மகாமத்திய வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
Mc Currie நிர்வாகம், பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து, தரம் 6 முதல் 9 வரையிலான தகுதியான மாணவர்கள் குழுவை அடையாளம் கண்டு, இந்த மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் பயணத்தை எளிதாக்கும் வகையில், அத்தியாவசிய கற்கைக்கான பொருட்கள் அடங்கிய, தொகுக்கப்பட்ட பரிசுப் பொதிகளை வழங்கியது.
Lanka Spice நிறுவனத்தின் இந்த தாராளத் தன்மை கொண்ட செயலுக்கு நன்றி தெரிவித்த, அத்துருகிரிய மகாமத்திய வித்தியாலயத்தின் அதிபர் எச்.ஏ. காமினி ஜயரத்ன, Lanka Spice நிறுவனத்தின் இந்த ஆற்றல் மிக்க செயலை நான் மிகவும் நன்றியுணர்வோடு பாராட்டுகிறேன். கடுமையான நிதி நிலைமைகளுடன் போராடும் குடும்பங்களைச் சேர்ந்த எமது பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்களின் கல்விக்கு இது உறுதுணையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எம்மைப் போன்ற பல பாடசாலைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஆதரவளித்து, இந்த சிறந்த பணியைத் தொடர Lanka Spice நிறுவனத்திற்கு அனைத்துத் வளமும், தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறோம். என்றார்.
Lanka Spice (Pvt) Ltd பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சு ஆரியரத்ன, Senehase Dath நிகழ்ச்சி தொடர்பில் பேசுகையில், Lanka Spice ஆகிய நாம், வாழ்க்கையை மாற்றும் கல்வியின் சக்தியை நம்புகிறோம். Senehase Dath திட்டம் இதற்கு ஒரு சான்றாகும். ஒவ்வொரு சிறுவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பான முக்கியத்துவத்துடன், எம்மைச் சூழவுள்ள சமூகங்களை ஆதரிப்பதிலான எமது அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. அடுத்த தலைமுறையின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். என்றார்.
மாணவர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உண்டாக்குவதற்கும், இது அதிகமான பாடசாலைகள் மற்றும் சமூகங்களைச் சென்றடைவதற்கும் Senehase Dath திட்டத்தை விரிவுபடுத்த Lanka Spice எதிர்பார்க்கிறது. 1984 இல் பத்திகிரிகோரளே குடும்பத்தால் நிறுவப்பட்ட Lanka Spice (Pvt) Ltd நிறுவனமானது, Mc Currie வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தியது.
இது இலங்கையில் உண்மையான, உயர்தர மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகளாக மாறியுள்ளது. சிறந்த சமையல் அனுபவங்களை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் மத்தியில் இந்த வர்த்தகநா நமம் பரவலான பிரபலத்தைப் பெற்றுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ஷ தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன குறிப்பிடுகின்றார்.
2001ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்குச் சென்று அந்த ஜோதிடரை சந்தித்த போது இந்த கணிப்பை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ச பற்றி தீர்க்கதரிசனம் கூறப்படவில்லை என்றும், பசில் ராஜபக்ச பற்றி கூறப்பட்டதாகவும் அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும், 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கமும் பசில் ராஜபக்ஷவினால் அழிக்கப்பட்டதாக அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ராஜபக்ச அரசாங்கங்களை அழித்த பசில் ராஜபக்ச, எஞ்சிய அரசாங்கங்களையும் அழிக்க முன்வர முயற்சிக்கிறார் என்றும் அவர் கூறினார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளை(18) முதல் 05 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு , கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாளை(18) மற்றும் நாளை மறுதினம்(19) விசேட பூச்சியியல் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 82036 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.