web log free
May 11, 2025
kumar

kumar

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

இத்தீ விபத்து இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான நபரும்,  வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம்(04) ஆரம்பமாகவுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய பரீட்சை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 

இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 329 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

434 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன. 

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அது தொடர்பான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில் காட்சிப்படுத்தப்பவுள்ளது.

ஹொரணை - பாணந்துறை வீதியின் மஹபெல்லான பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக அலோபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்த கார் ஒன்று முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 'கட்சித் தலைவராக' புதிய பதவிக்கு நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கட்சித் தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 'கட்சித் தலைவர்' என்ற குறைந்த அதிகாரங்களைக் கொண்ட புதிய பதவியொன்றை ஏற்படுத்தி, அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதியை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக வரும் எட்டாம் திகதி கட்சியின் செயற்குழு கூட்டப்பட உள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னரே தகவல்களை வௌியிட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

அவருக்கு ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்-டை-ஒக்சைடு கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு அனர்த்தங்களினால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், மண்சரிவு, வீதி மறியல் போன்றவற்றினால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இச்சலுகைக்கு உரித்துடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுப்பைப் பெறுவதற்கு வசிப்பிட கிராம அலுவலரின் சிபாரிசுடன் கூடிய கோரிக்கையை நிறுவன தலைவர் ஊடாக தமக்கு அனுப்பி வைக்குமாறு அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோகா விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு கீழே,

எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தல் தமிழ் மக்கள் நெருக்கடிகள் இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வர்த்தகர் ஒருவர் இறக்குமதிக்கான விலைமனு கோரலை வழங்கியுள்ளார். 

கோரல்களைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலில், யாழ். இந்தியத் துணைத்தூது வராலய அதிகாரி மனோஜ்குமார், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்டச்செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட வர்த்தகர்கள், மறவன்புலவு சச்சிதானந்தன், சிவசேனை அமைப்பினர், இந்திய, இலங்கை வங்கிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd