web log free
August 03, 2025
kumar

kumar

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

வாக்கெடுப்பின் போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதன்படி 45 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

27.2 இன் கீழ் சபாநாயகரின் அனுமதியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியை சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21) கருத்து வௌியிட்ட போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலைமை தொடர்பில் அண்மையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வௌியிட்டார்.

தீர்ப்பிற்கமைய குற்றவாளிகளுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தான் முன்வைத்த விசேட கூற்றின் விபரங்கள் அடங்கியிருந்த கோவையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பறித்துச் சென்றதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) குறிப்பிட்டார்.

நாட்டை வங்குரோத்து செய்ய உழைத்தவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ராஜபக்ஷர்களிடம் இருந்து நட்டத்தை மீட்பீர்களா? என்றும் பாராளுமன்றத்தில் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பாடசாலை மாணவர்களும் கலரியில் இருக்கின்றனர். ஆகையால், தொடர்ந்தும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

இந்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார வீடியோ எடுத்தார். அவ்வாறு வீடியோ எடுக்க வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நளின் பண்டாரவிடம் கேட்டுக்கொண்டார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியை முன்வைத்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்க்கட்சித் தலைவரை அணுகினர்.

இதன்போது, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மற்றும் ஏனைய சேவிதர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் வந்து அவரைப் பாதுகாப்பதைக் காணமுடிந்தது.

இதையடுத்து அவையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மீண்டும் 11.14க்கு ஆரம்பித்தார்.

அப்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத் நிஷாந்த அபகரித்தார். அதனை, சமர விக்ரமவிடம் கொடுத்தார். அத்தனையும் பிரதமர் முன்னிலையிலேயே நடந்தது.

என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? என்றும் வினவினார்.

 

கையடக்கத் தொலைபேசிகள் அல்லது இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்து அவற்றை இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை நாடாளுமன்ற அவையில் ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு யாராவது நடந்து கொண்டால் அது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் . 

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன. 

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்து கொண்டனர். 

பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கையின் உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (CBK) பாராட்டியுள்ளார்.

கடந்த வாரம் (நவம்பர் 14), முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர்கள் மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உட்பட அவரது அரசாங்கத்தின் பல அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பொருளாதார நெருக்கடியை தவறாகக் கையாண்டதற்குப் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) அமைப்பினர் சந்திர ஜெயரத்ன, ஜெஹான் கனகரெட்னா மற்றும் ஜூலியன் பொலிங் ஆகியோருடன் பொது நலன் கருதி தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களில் ஒரு சிலரை நீதிமன்றம் பெயரிட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்புடைய பலர் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் ஆனால் நீதிமன்றத்தால் பெயரிடப்படவில்லை.

இது நாட்டின் வருங்காலத் தலைவர்களுக்கும் ஒரு கற்றல் பாடமாகும், மேலும் "எதிர்கால சந்ததியினர் ஒரு தேசத்தை எவ்வாறு சரியாக ஆள்வது மற்றும் ஒருவரின் சுயத்திற்காக அல்லாமல் தேசத்திற்காக உழைக்கும் ஒரு தலைவராக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

குழுவினால் தவறாகக் கையாளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது அவர்களின் சட்டவிரோத சொத்துக்களை கைப்பற்றி இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அதனைப் பயன்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் பரிந்துரைத்தார்.

தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தாம் பாராளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் தனது பாராளுமன்ற சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்த ரஞ்சித் பண்டார, சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது சிறப்புரிமைகளை மீறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் காரணமாக எஸ்.பி திஸாநாயக்க தனது அரசியல் செயற்பாடுகளை இந்த நாட்களில் மிகுந்த ஆர்வத்துடன் முன்னெடுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவருக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்துகள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமும் எஸ்.பி.திஸாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றித் தெரிந்துகொள்ள முயற்சித்தோம், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் படி, நாட்டில் சுமார் 19,000 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளது.

எனவே நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (19) தெரணியகல, இலுக்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் கையிருப்பிலுள்ள குறிப்பிட்ட பொருட்களின் பெறுமதி அதிகரிக்கும்.

ஆனால் அரசாங்கம் என்ற வகையில், இது போன்ற தேவையற்ற இலாபத்தைத் தடுக்க அதிகபட்ச சில்லறை விலையை விதிக்கலாம். தற்போதைய அரசாங்கம் சீனி வரியை இரண்டு தடவைகள் மாற்றிய போது அவ்வாறான விலை உயர்வைத் தவிர்க்க அந்த நடவடிக்கையை பின்பற்றியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சீனி இருப்பு குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டாலும், சீனி வர்த்தகர்கள் லாபம் ஈட்ட பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவைப் பத்திரத்தில் கூட வரிக் காலத்தில் நாட்டில் உள்ள சீனி இருப்புகளை கவனமாகக் கணக்கிட வேண்டும் என்றும், இருப்புக்கள் தீரும் வரை அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்திருந்தது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத்திற்கும் முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, 2024 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் இரண்டரை வருடங்களை கடந்த பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதன்படி அடுத்த வருடம் எந்த நேரத்திலும் தேசிய தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு தேசிய தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வருட வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16,855,000 எனவும், கடந்த ஆண்டு (2022) வாக்காளர்களின் எண்ணிக்கையை விட இந்த வருடம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். .

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd