நெல் சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்தால் அரிசியின் விலை இரட்டிப்பாகும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் அமைச்சரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நெல் விலையை குறைக்காவிட்டால், அரிசி விலையை பராமரிப்பது கடினம் என்றும், அரிசி விலை இருமடங்காக உயரும் எனவும் பெரும்பான்மையான அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையை விட குறைந்த விலைக்கு தனியார் நெல் கொள்முதல் செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளதை அடுத்து வெலிக்கடை சிறையில் இருந்து ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார்.
எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வௌியிடவோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் தெரிவித்த கருத்துகளுக்காக கடந்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலரை விடுதலை செய்து விட்டு, 12 முதல் 26 வருடங்கள் வரை சிறைகளிலுள்ள 46 அரசியல் கைதிகளின் விடுதலையை தவிர்த்துவிடக்கூடாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்துவிட்டு, சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதிய சாட்சியங்களற்ற 61 கைதிகளை பிணையிலும் 23 கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பியும் விடுதலை செய்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் தண்டணை விதிக்கப்பட்ட அரசியல் கைதியோ அல்லது மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குட்பட்டிருந்த அரசியல் கைதியோ அரச தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்படும்போது தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவே அப்போதைய நீதி அமைச்சராக செயற்பட்டவர் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினர் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் பில்லியன் கணக்கில் ராஜபக்சவினர் சொத்துக்களை சேகரித்துள்ளனர், இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு - கிரிமண்டல மாவத்தையில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டினை கொள்வனவு செய்துள்ளனர். அந்தக் குற்றங்களுக்காக அனைத்து ராஜபக்சக்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
காலி நகரில் உள்ள தையல்கடைக்காரர் ஒருவரிடமிருந்து இரண்டு புகை குண்டுகள், 10 விமான எதிர்ப்பு தோட்டா உறைகள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலபிட்டிய, காலி, தக்கியா வீதியில் வசிக்கும் 63 வயதுடைய தையல்கடைக்காரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி நகரில் தையல் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அங்கு ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி, புதுடெல்லியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாகவும் அரிந்தம் பாக்சிதெரிவித்துள்ளார்.
இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமெனவும், எந்தவொரு அத்தியாவசியப் பயணத்திற்கும் நாணய மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவிக்கையில்,
கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பூஸ்டர் டோஸ் பெறுவது மிக அவசியமானது எனவும் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
நாட்டிலுள்ள விகாரைகளில் இருந்து இலங்கை மின்சார சபைக்கு 29 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தப்படாத அனைத்து விகாரைகளும் நகரை அண்மித்த பகுதிகளிலுள்ள நிதிப் பிரச்சினை இல்லாத விகாரைகள் எனவும், ஒரு விகாரைக்கு சுமார் 3 மில்லியன் ரூபா மின்சார கட்டணமாக சபைக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் இந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டே (2021) இத்தொகை வசூலிக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரை பணம் வரவில்லை என்றும், வசதி குறைந்த கிராமப்புற விகாரைகளில் மின்கட்டணத்தை உரிய திகதியில் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
மின்கட்டணம் செலுத்தாத போது, அந்த விகாரைகளின் சுவாமிகள், அரசியல் தொடர்புகள் மூலம், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, தலைவர் கூறுகிறார்.
அதன்பிறகு வாரியத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பணம் வசூலிப்பதை ஒதுக்கிவிட்டு அந்த இடங்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவார்கள் என்றார்.
நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையில் இந்த மின்கட்டணத்தை வசூலிப்பதில் மின்சார சபை அக்கறை காட்டாவிட்டாலும் சம்பளம் வழங்குவதற்கு மக்களின் சொந்தப் பணமே செலவிடப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் நேற்று (24) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (25) பிற்பகல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆறு இறப்புகள் மற்றும் நேற்று முன்தினம் பதிவான நான்கு இறப்புகளுடன் இரண்டு நாட்களில் 'கோவிட்' நோயால் பாதிக்கப்பட்ட பத்து பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 5 பேரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட ஒருவரும் அடங்குவதாகவும் அவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் மூடிய அறைக்குள் மிக் ஒப்பந்தம் தொடர்பில் கோட்டா அண்ணன் நிறுவனத்தின் நபர்களுடன் கொமிஷன் பணம் குறித்து கலந்துரையாடியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் கோட்டாபயவின் உறவினருமாகிய உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மிக் ஒப்பந்தத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் சிங்கப்பூரில் வசிப்பதாகவும், வெளிநாடுகளில் கோட்டாபய வசிக்கும் ஹோட்டல்களுக்கு அவர்களே பணம் செலுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
கோட்டாபயவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்த முன்னாள் ஜனாதிபதியைச் சுற்றியிருக்கும் அடியாட்கள் விரும்புவதாக அவர் உதயங்க குறிப்பிட்டுள்ளார்.