நாட்டில் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக இலங்கை மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் இரண்டு பிரதான உள்ளூர் மதுபான உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை ஆகும்.
இக் காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை அதிகரிக்கலாம் என்பதால், சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த மதுவரி திணைக்களம் அதிகாரிகளை நியமித்து நாடு தழுவிய அளவில் சோதனைகளை முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை, மது விற்பனை குறைந்துள்ளமையால் அரசுக்கான வரி வருமானத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விடுதலைப் புலிகளின் விசேட பிரிவின் கைதிகள் உட்பட இரு கைதிகள் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் மகசீன் சிறைச்சாலையின் பரீட்சை நிலையத்தில் மூன்று கைதிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு அனுப்பப்படும் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றும் முக்கிய நோக்கத்துடன் சிறைச்சாலை திணைக்களத்தின் பூரண ஈடுபாட்டுடன் கைதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பரீட்சைக்குத் தோற்றிய விடுதலைப் புலிகளின் விசேட கைதியான 38 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இவர், புவியியல்- விசேட சித்தியடைந்து, இந்து நாகரிகம்- விசேட சித்தியடைந்து, தமிழ் மொழி- பொதுத் தேர்ச்சியிலும் சித்தி இருந்திருக்கிறது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தோன்றிய கேகாலையைச் சேர்ந்த 46 வயதான கைதி, அரசியல் விஞ்ஞானம்-பௌத்த நாகரிகம்- சிங்களம் ஆகியவற்றில் சித்தியடைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்கவின் வீட்டில் கட்டணம் செலுத்தப்படாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது
பின்னர் உரிய நிலுவைத் தொகையை செலுத்தி பல முயற்சிகளுக்குப் பின் மீண்டும் மின் இணைப்பை பெற்றுக் கொண்டதாகவும் தெரியவருகிறது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாகவும் CPC தெரிவித்துள்ளது.
எனவே, எரிபொருள் கையிருப்பு முடிந்துவிட்டதாகக் கூறும் பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று CPC கேட்டுக்கொள்கிறது
ஹோமாகம பகுதியில் மோட்டார் சைக்கிளை 2 பேர் கொள்ளையடிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (27) இரவு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கலாவிலவத்தை பகுதியிலுள்ள கடையொன்றுக்கு இரவு உணவு வாங்கச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி ஆறு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மன்னார் தீவின் வடமேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள குடியேற்றமான தலைமன்னார் கடற்பகுதியில் சனிக்கிழமை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மன்னாரில் உள்ள மீன்வளத்துறை பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பிற்காக 400 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போதும், அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச, அது தொடர்பான திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், கோரிக்கை பரிசீலனை பிற்போடப்பட்டது.
புனர்நிர்மாணம் முடியும் வரை புல்லர்ஸ் லேனில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு ஒன்றை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதியல்ல, பதவியை ராஜினாமா செய்து தனது பொறுப்பில் இருந்து விலகிய ஜனாதிபதி, எனவே அவருக்கு முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகள் கிடையாது என்ற சட்ட வாதத்தின் அடிப்படையிலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவால் செய்ய நேரிடலாம் எனவே உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர் இலங்கைக்கு வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மிரிஹானவில் உள்ள தனியார் வீட்டை உரிய முறையில் திருத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 62.9 வீதமானவர்கள் தகுதி பெற்றுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.
37 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 12 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட 49 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.