– இளைஞர்களிடமும் ஆபத்தான பரவல்
2022ஆம் ஆண்டுக்கான அண்மைய தரவுகளின்படி, இலங்கையில் 3,800 வாய்ப்புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3,000 பேர் ஆண்கள் எனவும் தேசிய புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் சமூகத் தரவு நிபுணர் மருத்துவர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.
“புற்றுநோயற்ற நாளைய நோக்கி ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது வாய்ப்புற்றுநோயாளிகளின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னர் வயதானவர்களிடையே அதிகமாகக் காணப்பட்ட வாய்ப்புற்றுநோய், தற்போது 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமும் அதிகரித்து வருவது கவலைக்கிடமான போக்காக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாய்ச் சுகாதார ஆய்வில், பாவா, தூல் மற்றும் பொதியிடப்பட்ட பாக்கு ஆகியவை பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இப்பொருட்களை பயன்படுத்தத் தொடங்குவது எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
வெற்றிலைப் பாக்கு, மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்கள் வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிலையில் 28 வகையான புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனங்களும், பாக்கில் 4 வகையான புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களும் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் மேசன் தொழிலாளர்கள் வாய்ப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இதே நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா பதிராஜ கூறுகையில், வாய்ப்புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்றும், வாயில் சிவப்பு அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகினால் புற்றுநோய் பரவுவதற்கு முன்பே சிகிச்சையளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
எனினும், வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக மிகவும் தாமதமாகவே மருத்துவமனைக்கு வருவது கவலைக்குரிய விடயமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



