ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயம் எனவும், அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தம் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதாக மக்களுக்கு உறுதியளித்திருந்ததாகவும், அதற்காகவே அரசியலமைப்பில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், மோசடிக்காரர்களும் குற்றவாளிகளும் அச்சமடைந்து பதற்றமடைந்துள்ளதாக தெரிவித்த சமந்த வித்யாரத்ன, தமது அரசாங்கத்தின் கீழ் அவர்களுக்கு எந்தவிதமான மன்னிப்பும் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்.




