மன்னார் பள்ளத்தாக்கிலிருந்து பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் மிக உயர்தரமான இரண்டு எரிவாயு வளங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் புவியியல் ஆய்வுகள் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மன்னார் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட நான்கு ஆய்வுக் கிணறுகளில் இரண்டில் வெற்றிகரமாக எரிவாயு வளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் 20–25 ஆய்வுக் கிணறுகள் தோண்டப்படும்போது பொதுவாக இரண்டு அல்லது மூன்று கிணறுகள் மட்டுமே வெற்றியடையும் நிலையில், இலங்கையில் 50 சதவீதம் என்ற உயர்ந்த வெற்றி விகிதம் பதிவாகியுள்ளதாகவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த எரிவாயு வளங்கள் கடலின் அடிப்பகுதியில் இருந்து சுமார் 3,000 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாகவும், அவை பல மில்லியன் ஆண்டுகள் பழமையான எரிமலைக் குழம்புப் படலங்களின் கீழ் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னாரிலிருந்து தெற்கு நோக்கி பாணந்துறை வரையிலான ஆழ்கடல் பகுதியில் பெட்ரோலிய வளங்கள் இருப்பதை தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளதால், எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளிலும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வெளிநாடுகளில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் எரிவாயு மற்றும் எண்ணெய் தொடர்பில் நாம் நம்பிக்கை வைக்க முடியும். இது இலங்கைப் பொருளாதாரம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைவதற்கான சிறந்த வாய்ப்பாகும்” என பேராசிரியர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.




