அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
மேலும், கொட்டகலை சி.எல்.எப். வளாகம் உள்ளிட்ட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ஜனன தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விசேட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக தனது அர்ப்பணிப்புடன் போராடிய தலைவராக திகழ்ந்தார்.
இலங்கை இந்திய காங்கிரஸின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவர், அதன் தலைவராகவும் செயற்பட்டார். பின்னர் இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றதன் பின்னரும் அதன் தலைவராக இருந்து மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டார்.
பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமன்றி, நாட்டின் அரசியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்ற தேசியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.









