தற்போது அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், எந்தவித காரணமும் இன்றி அரசியல்வாதிகளை கைது செய்து, ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் சுதந்திரமான தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டின் ஜனநாயக முறையையும் எதிர்க்கட்சியையும் ஒடுக்குவதற்கான செயல்முறையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது சட்டத்தரணிகள் சங்கம், மருத்துவர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை மிகப்பெரிய பிரச்சினையாகும் என்றும், அரசியலமைப்பையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளதால் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
“குறிப்பாக, ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்குக் காரணம், அதற்கு அரசாங்கத்தினால் மக்கள் கருத்துக்கணிப்பு (சர்வஜன வாக்கெடுப்பு) நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்படாததே ஆகும். அதனால், அதன் சட்டபூர்வத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் ஊடாக மக்கள் கருத்துக்கணிப்பொன்றை நடத்துமாறு கோரினோம்.
ஆனால் இன்று முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, பல்வேறு குழுக்கள் அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்துவதையும், அதேபோன்று அரசியல்வாதிகளை எந்தவித காரணமும் இன்றி கைது செய்வதையும் காண முடிகிறது. இவை அனைத்தும் நாட்டின் ஜனநாயக முறையையும் எதிர்க்கட்சியையும் இல்லாதொழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதேபோன்று, சுதந்திரமான தொழிற்சங்கங்களையும் இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது, மருத்துவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, மற்றுமொரு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பௌத்த பிக்குகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். இவை அனைத்தின் மூலமும் நாட்டின் அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் இல்லாதொழிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு பேசுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், குறிப்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய அவர்களை அழைத்திருந்த சந்தர்ப்பத்திலும், அவரை நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்கவில்லை. இப்படியான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த நாடு எங்கிருந்து ஆட்சி செய்யப்படுகிறது?
நாடாளுமன்றத்திலிருந்தா அல்லது பெலவத்தையிலிருந்தா? இப்படியான கேள்விகள் எழும் சூழ்நிலையில், மக்களின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பின் 3ஆவது சரத்தை பாதுகாக்க வேண்டும். 9ஆவது சரத்தின் பிரகாரம் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைவோம். 1946ஆம் ஆண்டு அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திரமான இலங்கையை உருவாக்கினோம்.
இன்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக்கொள்வோம்.”




