எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் காரணமாக உலகம் கடுமையான காலநிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
அறிவியல் தரவுகளின்படி, பூமி இதற்கு முன்னர் ஒருபோதும் எதிர்கொள்ளாத ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், கடல் நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் ஏற்பட்ட மிக வலுவான எல் நினோ நிலையாக இது இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்சம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இது நீடிக்கக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
இந்த எல் நினோ நிலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் பொருளாதாரங்களுக்கும் மிகப்பெரிய மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டே சவுலோ தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தரவுகளின்படி, இந்த நிலைமை காரணமாக உலகளாவிய காலநிலை முறைகள் மாற்றமடையும். இதனால் சில பகுதிகள் கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் அதேவேளை, ஏனைய பகுதிகளில் வலுவான சூறாவளிகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித செயற்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்கனவே உலக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், எல் நினோ நிலைமையின் தாக்கத்தால் சில பகுதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்காசியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் உள்ள பரந்த நிலப்பரப்புகளில் சராசரியை விட குறிப்பிடத்தக்க அளவில் வறண்ட காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.




