பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகளை இம்மாதம் (செப்டம்பர்) முடிவதற்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 23,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் பரீட்சையின் மூலம் 15,000 பேரும், திறந்த அடிப்படையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பரீட்சையின் மூலம் 8,000 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்படும் அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.




