ஏழு ஊழியர்கள் காயம் – இருவரின் நிலை கவலைக்கிடம்
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஊழியர்கள் உடனடியாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் வைத்தியசாலையின் சமையலறை உள்ளிட்ட கட்டிடப் பகுதிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சம்பவம் இடம்பெற்ற வேளையில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அல்லது வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக அவர்களை பாதுகாப்பான வேறு வார்டுகளுக்கும், பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகமும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பான தகவல்கள் பொலன்னறுவை நீதிமன்றத்திற்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




