– ஹட்டன் வர்த்தகர்கள் தெரிவிப்பு
உள்நாட்டு சந்தையில் தேவைக்கு ஏற்ப காய்கறி விநியோகம் இல்லாததன் காரணமாக, மலையக மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலைமையில் மலையக மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் கிடைக்கும் காய்கறிகளின் ஒரு கிலோகிராம் அதிகபட்ச சில்லறை விலை 400 முதல் 600 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், விலை அதிகரிப்பால் நுகர்வோர் காய்கறிகளைக் கொள்வனவு செய்வது குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளின் விலை அதிகரிப்புடன் மரவள்ளிக்கிழங்கின் ஒரு கிலோகிராம் விலையும் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் நிலவிய கடும் சீரற்ற காலநிலை காரணமாக காய்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையே விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணம் என ஹட்டன் பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.




