– அமைச்சர் வசந்த சமரசிங்க
உள்நாட்டு சந்தைக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகம் செய்வதாக LAUGFS நிறுவனம் அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் முறையாக நிறைவேற்றவில்லை என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாட்டை வந்தடையும் எனக் கூறப்படும் எரிவாயுக் கப்பல் தொடர்பிலும் உறுதியான நம்பிக்கையை வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
LAUGFS நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டியவின் மகனும், அந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமானவர் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, இலங்கைக்கு எரிவாயு இறக்குமதி செய்வதற்கான கால அட்டவணையை முன்னதாக சமர்ப்பித்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த எழுத்து மூல உறுதிமொழியின்படி,
ஒக்டோபர் 24 முதல் 28ஆம் திகதி வரை 3,800 மெட்ரிக் தொன் எரிவாயு.
நவம்பர் முதல் வாரத்தில் மேலும் 3,800 மெட்ரிக் தொன்.
நவம்பர் மாதத்தில் மேலும் 22,000 மெட்ரிக் தொன்.
டிசம்பர் மாதத்தில் மேலும் 22,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நாட்டிற்கு இறக்குமதி செய்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் கால அட்டவணை முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒக்டோபர் 28ஆம் திகதி வருவதாகக் கூறப்பட்ட கப்பல் வரவில்லை. அது குறித்து வினவியபோது நவம்பர் 03ஆம் திகதி வரும் எனத் தெரிவித்தனர். ஆனால், அன்றும் கப்பல் வரவில்லை. தற்போது நவம்பர் 14ஆம் திகதியே கப்பல் வரும் எனக் கூறுகின்றனர். எனவே, தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது நவம்பர் 14ஆம் திகதி வருவதாகக் கூறப்படும் கப்பலும் வராமல் போகலாம். அதிலும் உறுதியில்லை.”
நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும், நடைமுறையில் அதன் உத்தியோகபூர்வ வாக்குறுதிகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருவதாகவும், இதனால் சாதாரண நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




