– பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த
தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது எவ்விதத்திலும் தேவையற்ற மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை என தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதுவரை நடைமுறையில் இருந்த வரி கட்டமைப்பில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து, அதனை மிகவும் நியாயமானதும் முறையானதுமான கட்டமைப்பாக மாற்றுவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர், இலவசக் கல்வி, சுகாதார சேவைகள், அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுதல் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான பிரதான மூலமாக வரி வருமானம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வரி முறையின் செயல்திறனை அதிகரித்து, நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் வரி நிர்வாகத்தை முறைப்படுத்துதல், திறம்பட வரிகளை அறவிடுதல் மற்றும் மக்களை வரி செலுத்துவதற்கு ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் முக்கியமான விளைவாக நாட்டின் வரி செலுத்துவோர் தளம் விரிவடைந்துள்ளதுடன், 2025ஆம் ஆண்டுக்காக எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விடவும் அதிக வரி வருமானத்தைத் திறைசேரியினால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பல்வேறு வரிகளை தன்னிச்சையான முறையில் அதிகரித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக சில தரப்பினர் முன்னெடுத்து வரும் பிரசாரங்கள் முற்றிலும் தவறானவை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.




