தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, வட மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தவிர, பதுளை மாவட்டத்தின் ஏனைய அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்படவுள்ளன.
குறித்த பகுதிகளில் உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




