டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலை 47 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக முட்டை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலைகள் சுமார் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால், முட்டையின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு 32 முதல் 34 ரூபா வரை காணப்படுகிறது. எனினும், நிலவரப்படி பண்ணை விலை 35 ரூபாவாகவும், சந்தை விலை 40 ரூபாவாகவும் காணப்பட்டதாக அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்வதற்காக, பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்யத் தூண்டப்படலாம். இதனால் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலா விடுதிகளில் முட்டைக்கான கேள்வி அதிகரிக்கும் என்றும், அதற்கேற்ற வகையில் விநியோகத்தை வழங்க முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவும் விலை அதிகரிப்புக்கு மற்றுமொரு காரணமாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் முட்டைகளை வழங்கும் நோக்கில், முட்டைகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைக்குமாறு இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு முட்டைக்கு 9 முதல் 11 ரூபா வரையிலான வரி அறவிடப்படுவதாகவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்களின் புரதத் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்யக்கூடிய முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு எவ்வித வரியும் விதிக்கக்கூடாது என்றும் அந்தச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.




