நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் முறையாகக் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் கிரிஷ் (Krrish) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது அரச தரப்பு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் கிடைத்துள்ளனவா என்பதை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் CIDக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாடி அபர்ணா சுவந்துருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த இரண்டு சாட்சிகளும் தற்போது வெளிநாடுகளில் இருப்பதாகவும், அவர்களுக்கான அழைப்பாணைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனினும் அவை முறையாகக் கையளிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினமும் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் இருந்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.




