மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தந்த அமைச்சுக்களின் நிறுவனங்களில் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்காத அமைச்சரவை அமைச்சர்களின் செலவுத் தலையீடுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் ஆதரவளிக்காது இருப்பது பற்றியே இவ்வாறு கலந்துரையாடப்பட்டது.
இந்த இரகசிய கலந்துரையாடலில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அமைச்சரவை அமைச்சர்களுக்கு பல விடயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கவில்லை எனவும் இந்த இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தற்போதைய அமைச்சரவையை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அதே அமைச்சரவையை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திலும் தொடரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள் சபையில் உள்ள அமைச்சர்கள் பலர் மொட்டுவின் சித்தாந்தத்திற்கு முரணான கருத்துக்களைக் கூறுவதால் அவர்களை மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக்கூடாது எனவும் மொட்டு கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே, மொட்டுவின் ஆலோசனைகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய அமைச்சரவையை ஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (17) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (17) A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய மண்டலங்களில் ஒரு மணி நேரம் பகல் நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு ஏற்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களம் 2010 ஆம் ஆண்டு முதல் கொக்கல ராடார் அமைப்பை அமைப்பதற்காக 40 கோடி ரூபாவிற்கும் அதிகம் (402.8 மில்லியன் ரூபா) செலவிட்டுள்ளது. ஆனால் இதுவரை ரேடார் அமைப்பு கட்டப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ரேடார் அமைப்பை நிர்மாணிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 91 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பொருட்கள் காணாமல் போயிருப்பது குறித்தும், தோல்வியடைந்த திட்டத்துக்கு காரணமான அதிகாரிகள் குறித்தும், அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்தும் முறையான தணிக்கை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் தற்போதுள்ள பொருட்கள் மற்றும் கோபுரத்துடன் கூடிய கட்டிடம் தற்காலிக பாவனைக்காக அங்கு நிலைகொண்டுள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரி கணக்காய்வரிடம் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட இந்த மாதத்தில் 900 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இதனைக் காண இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 165,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.
பார்வையாளர்கள் வாங்கும் டிக்கெட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வசதிகள் மூலம் மேற்படி வருமானம் பெறப்படுவதாக தலைமை நிர்வாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்ட முதல் நாளான செப்டம்பர் 15ம் திகதி 21 வெளிநாட்டவர்கள் உட்பட 2612 பேர் வந்து பார்வையிட்டு அதன்மூலம் 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறை வேலைத்திட்டத்தை எதிர்கொள்ள மக்கள் போராட்டத்தில் ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முறையான தலைமை இல்லாத காரணத்தினால் கடந்த முறை அரசு போராட்டத்தை அடக்க முடிந்ததாகவும், இம்முறை அப்படி நடக்காமல் இருக்க தனது நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் செலவழித்து போராட்டத்திற்கான அடித்தளத்தை தயார் செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மிகவும் அநியாயமாக மக்களை இலக்கு வைத்து அரசாங்கத்தின் அடக்குமுறை அமுல்படுத்தப்படுமாயின் அதனை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தியவாறு போராட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
22ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைக்குழு கூட்டம் நேற்றைய தினம் (15.10.2022) இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரட்டை குடியுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது. சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை பசில் ராஜபக்சவின் எண்ணப்படி செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நாம் ஒருபோதும் இடம் தர மாட்டோம்.
பசில் ராஜபக்ச அமெரிக்க காங்கிரசில் இடம் தேடி கொள்ளட்டும். அதேவேளை நாடாளுமன்றத்தை, அடுத்த வருட முதல் காலாண்டில் கலைக்க இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் தரும், “இரண்டரை வருடம்”, என்ற விதி மாற்றப்படக்கூடாது.
இந்த நாட்டு மக்கள் இன்று, இந்த நாடாளுமன்றத்தை மாற்றி, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறார்கள். ஆகவே, இரண்டரை வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தொடர்ந்து விடப்படுவதை நாம் தந்திரோபாய நோக்கில் ஆதரிக்கிறோம்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்கள் கூடி நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தால், அதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுக்க முடியாது. அதை அவர் ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்க வேண்டும் என நாம் நம்புகிறோம்.
ஆகவே அடுத்த வருடம் தேர்தல் மேகம் சூழும். புதிய மக்களாணையை பெற கட்சிகள் தயாராக வேண்டும். தேர்தலை சந்திக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் நிலையில் இருக்கிறது. அந்நிலையை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார், அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் போது சீனாவின் சோசலிசக் கட்டமைப்பில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்வரும் 20ஆவது தேசிய மாநாட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் வாழ்த்துக் கடிதத்தை கையளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் வாழ்த்துக்களுக்கு மேன்மைதங்கிய Qi Zhenhong நன்றி தெரிவித்ததுடன் இலங்கையும் சீனாவும் நட்புறவு நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை தற்போது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும்Qi Zhenhong குறிப்பிட்டார். இலங்கையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனாவின் உதவியை அவர் உறுதியளித்தார்.
இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை மீனவர்கள் அவ்வப்போது அத்துமீறி வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 150 கடல்மைல் தூரத்தில் 5 இலங்கை மீனவர்கள் படகில் நின்றனர். அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களது படகினையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் இன்று இரவு தூத்துக்குடி தருவைகுளம் அல்லது நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள்.
பின்னர் அங்கு வைத்து அவர்களிடம் கியூபிரிவு போலீசார், சிறப்பு பாதுகாப்பு படையினர், இந்திய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தனித்தனியாக விசாரணை நடத்துவார்கள்.
அப்போது அவர்கள் எதற்காக அத்துமீறி இந்திய கடல்பகுதியில் நுழைந்தார்கள் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அரைவாசிக்கு குறைக்கவேண்டி ஏற்படுகின்றது.
அவ்வாறு இடம்பெற்றால் மீண்டும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. அதனால் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் முயற்சியை தடுப்பதற்காகவா அரசாங்கம் இதனை மேற்காெள்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதி அடைப்படையிலும் நூற்றுக்கு 25வீத பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நியதியின் அடிப்படையிலாகும்.
அதேநேரம் தொகுதி அடைப்படையில் வெற்றிகொள்ள முடியாத கட்சிகளுக்கு, அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்கு வீதத்தின் பிரகாரம் உறுப்பினர்கள் தெரிவு செய்துகொள்ளும் சிக்கலான முறையும் இதில் இருக்கின்றது.
அதனால்தான் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க மூன்றில் இரண்டுக்கும் அதிகமான உறுப்பினர்கள் தேவைப்பட்டது. அதனால் தற்போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசிக்கு குறைக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு உறுப்பினர்களின் எணணிக்கையை குறைப்பதாக இருந்தால் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அரைவாசிக்கு குறைக்கவேண்டி ஏற்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் எல்லை நிர்ணயத்துக்கும் செல்லவேண்டி ஏற்படுகின்றது.
தற்போது மாகாணசபை தேர்தல் நடத்துவதற்கு தடையாக இருப்பதும் எல்லை நிர்ணயமாகும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இதுவரை பிரதமர் கையளிக்காமல் இருப்பதனாலே இது இழுபறியில் இருக்கின்றது.
இந்த சாதாரண காரணத்தினால் மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அனுப்பும் மக்களின் உரிமையை இல்லாமலாக்கி இருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடந்த வருடம் மார்ச் மாதத்திலேயே இடம்பெற இருந்தது, என்றாலும் அப்போது நாட்டில் தேர்தல் நடத்தக்கூடிய சூழல் இருக்கவில்லை.
அதனால் தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போடுவதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதன் பிரகாரம் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அந்த ஒருவருட காலத்தில் 6 மாதத்துக்கு பின்னர் தே்ர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது.
அதன் பிரகாரம் செப்டம் மாதத்தில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தற்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாத்துக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடியும்.
எனவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு எடுக்கும் முயற்சியை தடுப்பதற்காகவா ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது என தெரிவித்தார்