web log free
May 07, 2025
kumar

kumar

பாராளுமன்றத்தை கூட்டி தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் 6 மாத கால அவகாசம் அவர்களுக்கு தருவதாகவும் இல்லை என்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று நாட்டு மக்களின் முடிவை கேட்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

"நான் பாராளுமன்றத்தை ஒருமுறை கூட்டி தேர்தல் சீர்திருத்தங்களை அனுமதிப்பேன். அதற்காக அவர்களுக்கு 06 மாத கால அவகாசம் தருகிறேன். இல்லை என்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று நாட்டு மக்களின் முடிவை கேட்பேன்."

இலங்கையில் வருடம் தோறும் சுமார் 3 ஆயிரத்து 200 பேர் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைமை காணப்படுவதாக தேசிய மனநல சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் தற்கொலை செய்துக்கொள்வதை தடுக்கும் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதுடன் செயல் மூலம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது என்ற தலைப்பில் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை தொனிப்பொருளின் கீழ் இந்த தினம் அனுஷ்டிக்கப்படும். தற்கொலைக்கு பதிலாக மாற்று வழி இருக்கின்றது என்பதை நினைவூட்டுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகில் வருடந்தோறும் சுமார் 7 லட்சத்து 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். மேலும் பலர் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

உலகில் தற்கொலை செய்துக்கொள்வோரின் அதிகமான சதவீதம் ஆசிய பிராந்தியத்திலேயே பதிவாகி வருவதாக தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் அரோஷ விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரச கூட்டுத்தாபனங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் தேவையை பூர்த்தி செய்யும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களினால் ஏற்படும் பாரிய நட்டத்தை அரசாங்கத்தால் இனி தாங்க முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களின் ஊழியர்களுக்கு 111 வாகனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழக் கூட முடியாத நிலையில் முப்பத்தேழு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் செலவினம் மேலும் அதிகரிக்கும் என்றார்.

ஒரு இராஜாங்க அமைச்சருக்கு 5 பேர் கொண்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களில் மூவருக்கு அரசு மூன்று வாகனங்களை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் மாஞ்சோலைசேனை பகுதி சிறுவனை முன்னிலைப்படுத்திய போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தந்தை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், கிண்ணியா பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி மாணிக்க ராசா நளினி உட்பட அவரது குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.

குறித்த சிறுமி சட்ட வைத்திய நிபுணர் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அல்லது மூடவும், அதேபோன்ற நிறுவனங்களை இணைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரசின் தொடர் செலவுகளை குறைக்கவும், தேவையற்ற செலவுகளை குறைக்கவும் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வுகளைப் பெற்று நேரடியான மற்றும் விரைவான பதில்களைப் பெறக்கூடிய முதலீடுகள் வடிவில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கான குறைந்தபட்ச செலவில் நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணத்திற்கு விண்ணப்பிக்குமாறு நிதி அமைச்சகம் ஏற்கனவே அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு நிலக்கரியை வழங்குவது தற்போது சாத்தியமில்லை என குறைந்த விலைக்கு வழங்கிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரை இந்த தீர்மானத்தை மேற்கொள்வதாக இலங்கையில் உள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் தேவையான நிலக்கரி கையிருப்பு நாட்டிற்கு கிடைக்காவிட்டால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அப்போது ஏழு அல்லது எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்ய வேண்டியிருக்கும் என்று ஆணைக்குழு கூறுகிறது.

புதிதாக 12 அமைச்சர்கள் விரைவில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமலவீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.

ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

சமந்தா பவர் சற்றுமுன் (10) இலங்கைக்கு வந்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் நிர்வாகியான சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வந்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த காலப்பகுதியில், அவர் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஆசன அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தின் தலைவராகவும், தான் களுத்துறை மாவட்டத்தின் தலைவராகவும் உள்ளதாக குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd