பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் குழுக்களை மிகவும் திறம்பட செயல்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தணிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துத் பிரதமர் விளக்கமளித்தார். அந்த நடவடிக்கைகளுக்கு நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தனது ஆசிர்வாதங்களை வழங்கும் என கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது அரசாங்கத்தின் பாரிய முன்னெடுப்பாக அமைய வேண்டுமென தமது அமைப்பு உறுதியாக நம்புவதாக ஜெயசூரிய மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி சுஜாதா கமகே, சுனில் ஜயசேகர, ஹரேந்திர தசநாயக்க, ரிச்சர்ட் தனிப்புலஆராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு சலுகை அடிப்படையில் டீசல் வழங்குவதற்கு சீனா முன்வைத்துள்ள பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் அவசரத் தேவையாக மாறியுள்ள டீசலை வழங்குவதற்கான சீனாவின் யோசனைக்கு இலங்கை பதிலளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ள நிலையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் சீனாவின் பிரேரணைக்கு இலங்கை பதிலளிக்காதது சீனாவிற்கு ஆச்சரியமளிப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2500 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
நாட்டில் தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் டீசல் உள்ளது.
அடுத்த 09 அல்லது 10 நாட்களில் ஒரு கப்பல் வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது நிச்சயமற்றதாகவே உள்ளது.
இந்தியாவின் உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் வரும் 16ம் திகதி வரும் வரை, தற்போதுள்ள டீசல் இருப்புகளை நிர்வகிக்க கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
எனினும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ளப்பட்ட தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மற்றும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்ட நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (03) இரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, பந்துலுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
போராட்டக்காரர்கள் யார்க் தெரு, வங்கித் தெரு அல்லது சத்தம் தெருவுக்குள் நுழைவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை போலீஸார் பெற்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நாளைய தினம் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுமக்களுக்கோ அல்லது வாகனப் போக்குவரத்துக்கோ எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுமதியில்லை.
கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்தனேகம மகா வித்தியாலய அதிபர் ருவன் சிறி ஹேரத் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபரின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளின் போது தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அனுராதபுரம் பொலிஸாரிடம் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். மாகாணக் கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே இந்த தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் லக்மால் விஜேரத்னவின் பணிப்புரையின் பேரில் சிஐ சமிந்த குணசேகர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்
பொலிஸாருக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்த பாராளுமன்ற உறுப்பினர் வேதாராச்சியின் மகன் மற்றும் மருமகளுக்கு மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற வாக்குவாதத்தில் பயன்படுத்தப்பட்ட அவமானகரமான வார்த்தைகள் மற்றும் நடத்தையை கண்டிப்பதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொலிஸாருடன் ஒத்துழைப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அவரது மகன் மற்றும் மருமகளுக்கு வழங்குமாறு எம்.பி.வெதராச்சியிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.