web log free
May 08, 2025
kumar

kumar

எதிர்வரும் 2 மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கும், தொழில் புரியாதவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்ததாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுப்படுத்தியுள்ள அவர்…

“ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிவாரண கொடுப்பனவு அதாவது தலா 5,000 ரூபா என்ற வகையில் இரண்டு மாதங்களுக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனை பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கும், தொழில் புரியாதவர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். இந்த கொடுப்பனவு நிவாரண உணவு பொதியாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.” என்றார்.

எதிர்வரும் சில நாட்களுக்கு டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அதன் தலைவர் சுமித் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த எரிபொருள் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசலை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் தற்போதைய உயர் விலையில் தொடர்ந்து எரிபொருள் விற்பனை செய்யப்படுமானால், இந்த ஆண்டு முழுவதும் எரிபொருளை இறக்குமதி செய்ய மட்டும் 5 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, டொலர் தட்டுப்பாடு காரணமாக 37500 மெற்றிக்தொன் டீசல் கப்பல் ஒன்று கொழும்பில் மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலுக்கு தேவையான டொலர்கள் இன்று செலுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் பிம்ஸ்டெக் அமைச்சர்கள்மட்ட அமர்வினை அடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தீர்க்கமான சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

அதற்கமைவாகவே செவ்வாய்க்கிழமை (29) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டிருந்தார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , இந்தியா வழங்கியுள்ள உதவிகள் சாதாரணமானவையல்ல என்றும் , இந்தியா அவ்வாறு வேறு எந்த நாடுகளுக்கும் தொடர் உதவிகளை வழங்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக ஜனாதிபதியை திட்டி கருத்துக்கள் பகிரப்படுவதால் இந்த தடை போடப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர்,  தேர்தல் காலத்தில் இவருக்காக app உருவாக்கபட்டது குறிப்பிடதக்கது .

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தேசிய சபை கூடியபோதே செந்தில் தொண்டமான் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கட்சியின் தவிசாளராக மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்

தேசிய சபை கூட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வழிநடத்தினார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமைச்சரின் வருகை காரணமாக வெலிமடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்றிருந்த சிலர் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"வெலிமடையில் நான் திட்டமிடப்பட்ட நிகழ்வு எதுவும் இல்லை, இது ஒரு தவறான புரிதல். எனது பெயரால் பரவிய வதந்தி" என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் அப்பகுதிக்கு வருவதாகக் கூறப்படும் தகவலையடுத்து வாகனங்கள் உட்பட வரிசையில் நின்ற பொதுமக்கள் வேறு பாதையில் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மீது கொதித்தெழுந்த மக்கள், நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தையும் கண்டித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து அசௌகரியங்களுக்கும் முதலில் தாம் மன்னிப்புக் கோர விரும்புவதாகக் கூறிய அமைச்சர், இது கடினமான காலங்கள், ஆனால் "நாங்கள் அவற்றை சமாளிப்போம்" என்று தான் நம்புவதாகக் கூறினார்.

வெலிமடையில் தமக்கு திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று மேலும் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இது தவறான புரிதல் மற்றும் வதந்தி என கூறினார்.

அட்டன் நகரில் உள்ள பிரதான வழிகளை மறித்து சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் இன்று (30.03.2022) போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுளளது. அத்துடன், அட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.  

அட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்கு நேற்று (29.03.2022) மாலை முதல் சாரதிகள் காத்திருந்தனர். எனினும், இறுதி நேரத்தில் டீசல் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கடுப்பாகிய சாரதிகள் பொதுமக்களுடன் இணைந்து அட்டன் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் நேற்று (29.03.2022) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸாரின் தலையீட்டுடன் போராட்டம் நிறுத்தப்பட்டது.  

எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
 
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இம்மாதம் 4ம், 5ம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

டீசல் பெற்றுக் கொள்வதற்காக இன்று (30) மற்றும் நாளை (31) திகதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd