இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் உருவாக்கிய மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெண் என்பவர் இந்த தேசத்தைக் கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களின் பங்கு என்பது அளப்பறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படுமிடத்து, பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப்படும் இடத்தில் இலங்கை முதலாவது இடத்தில் காணப்படுகிறது என்றும் அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பதாகும். ஒரு சிறந்த பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க செயற்பட்டு அவர்களின் ஆட்சியின் போது மக்களுக்காக சிறப்பாக செயற்பட்டு சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். பெண்களின் சிறந்த ஒரு தலைமைத்துவத்திற்கு அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
பெருந்தோட்ட பெண்கள் பிரித்தானிய ஆட்சி காலம் முதல் இன்றுவரை இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நம் நாட்டிற்கான அந்நிய செலவாணியை பெருந்தோட்ட பெண்கள் பெற்றுகொடுத்து நம் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.
பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். வீட்டையும் நாட்டையும் கட்டியெழுப்பும் வலிமை பெண்களுக்கே உண்டு.
பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலைசெய்யப்பட்ட இலங்கை குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரின் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கனடாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்த அக்குடும்பத்தினரின் பெயர் விபரம்
ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பண்டாரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகனாயக (35) - தாய், இனுக விக்ரமசிங்க (7) - மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) -மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் இன்று (07) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது, லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வழிமொழிந்தார்.
இதன்போது குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் புதிய தலைவர் வருகை தந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன், குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பிரசன்ன ரணவீர, டயனா கமகே, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம். அதாஉல்லா, நிரோஷன் பெரேரா, அஷோக் அபேசிங்க, ஜயந்த கெடகொட, எஸ். சிறீதரன், ஹெக்டர் அப்புஹாமி, எம். உதயகுமார், மேஜர் பிரதீப் உந்துகொட, கருணாதாச கொடிதுவாக்கு, இசுறு தொடங்கொட, முதிதா பிரசாந்தி, சஹன் பிரதீப் விதான, மதுர விதானகே, வீரசுமன வீரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல் தடவையாக இன்றையதினம் (07) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தனவின் பெயரும் காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழியப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன அதனை வழிமொழிந்தார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.
குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குழுவில் தெரிவித்தார்.
அத்துடன், எந்தவித அரசியல், கட்சி பேதங்களும் இன்றி ஒரே குழுவின் உறுப்பினர்களாக அனைவருடனும் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் கோப் குழுவின் உறுப்பினராக செயற்பட்ட போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும், பரிந்துரைகளை செயற்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையியற் கட்டளைகளை திருத்துவதன் தேவையையும் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புற, லொஹான் ரத்வத்த, இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர திசாநாயக்க, ரவுப் ஹக்கீம், டிலான் பெரேரா, மஹிந்தானந்த அளுத்கமகே, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார ஜயமஹ, ஹேஷா விதானகே, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் குமார சுமித்ராறச்சி, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, எம். ராமேஸ்வரன், காமினி வாலேபொட, ராஜிகா விக்ரமசிங்க, மதுர விதானகே, (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்கும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ச செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார். தேசிய தேர்தல் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி உருவாகி வரும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
மேலும், எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்று கட்சிகள் விவாதிக்கும் நேரத்தில் இது நடைபெறுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக நாடு முழுவதும் அரசியல் பேரணிகளை இந்த குழு ஏற்கனவே நடத்தத் தொடங்கியுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், SLPP, ஒரு கட்சி என்ற வகையில், இதுவரை எந்த முறையான முடிவையும் எடுக்கவில்லை.
உள்ளக வட்டாரங்களின்படி, நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களுக்கும் இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அல்லது வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், மாலை அல்லது இரவில் ஏற்படக்கூடிய சில மழையைத் தவிர, முக்கியமாக வறண்ட வானிலை இருக்கும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தான் விற்பனை செய்யும் ஐந்து வகையான எரிபொருட்களாலும் இலாபம் ஈட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
லங்கா சுப்பர் டீசல் லீட்டருக்கு 78 சதம், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 61 சதம், ஓட்டோ டீசல் லீட்டருக்கு 60 சதம், ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு 15 சதம், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டருக்கு 14 சதம் இலாபம் ஈட்டுவதாக அமைச்சர் கூறுகிறார்.
95 ஒக்டேன் பெட்ரோல். 163.41 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 144.50 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெட்ரோல். 130.44 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 107.47 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 3.15 ரூபாவாகவும் வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
'மக்கள் வங்கி பணம் அனுப்பல் சேவை கோடி அதிர்ஷ்டம் -2023' இன் மாபெரும் சீட்டிழுப்பில் ரூபா. 10 மில்லியன், ரூபா. 3 மில்லியன் மற்றும் ரூபா. 2 மில்லியன் பரிசுத் தொகைகளுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு மக்கள் வங்கியின், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள் வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
2023 டிசம்பர் 10 முதல் 2023 டிசம்பர் 31 வரையிலான வாராந்த வெற்றியாளர்களும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான இலட்சாதிபதி;களும் நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமக்கும் தமது குடும்பங்களுக்கும் சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அயராது உழைக்கும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், பாராட்டுவதற்காகவும் மக்கள் வங்கி 'கோடி அதிர்ஷ்டம் 2023' சீட்டிழுப்பை ஆரம்பித்து.
கிளைவ் பொன்சேகா - மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர், அஸ்ஸாம் ஏ. அஹமத் - நிதித் தலைவர், நிபுணிகா விஜயரத்ன - பிரதிப் பொது முகாமையாளர் (வங்கி ஆதரவு சேவைகள்), ஈ.ஏ.எம். திஸாநாயக்க - பிரதம உள்ளக கணக்காய்வாளர், நாலக விஜயவர்தன - சந்தைப்படுத்தல் தலைவர், அருணி லியனகுணவர்தன - உதவிப் பொது முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், ரேணுகா அருணாச்சலம் - பிரதம முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், திலினி பெரேரா - சிரேஷ்ட முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், விபுல வர்ணகுல - சிரேஷ்ட முகாமையாளர், தகவல் தொழில்நுட்பம், நதீஷா தென்னகோன் - முகாமையாளர், வெளிநாட்டு நாணயக் கணக்கு மற்றும் சுதீர சமரசிங்க – மேல்மாகாண வருமான வரித் திணைக்களத்தின் சிரேஷ்ட மதிப்பீட்டாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால், சமூக வலைதளங்களுக்குச் சொந்தமான மார்க் ஜூக்கர்பெர்க்கின் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் நேற்று திடீரென முடக்கப்பட்டன.
பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்படுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
சமூக ஊடக தளங்களான Facebook, Messenger மற்றும் Instagram ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து Meta பங்குகளும் 1.5 சதவீதம் சரிந்தன.
ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம். சில மணி நேரம் கழித்து, 'மெட்டா' நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு, பிழையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டது.