பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் தங்கம் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியூடாக இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறினார்.
இருநாடுகளுக்கும் இடையிலான மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை இலங்கை கடலுக்குள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் தொலைபேசி கலந்துரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் செயற்பாடு நிறுத்தப்படுமென தமிழக அரசாங்கம் உறுதியளிக்கும் பட்சத்தில் மாத்திரமே மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட முடியும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
2022 மார்ச் மாதத்தில் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இறுதியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து GPS கருவிகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றத்திற்காக 5 இந்திய மீனவர்களுக்கு அண்மையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் பணிப்பகிஷ்கரிப்பையும் முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இலங்கை மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியிருந்தனர்.
இலங்கை மீனவர்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் உள்நுழையும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 12 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புதிய கூட்டணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைக்க எதிர்பார்த்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிமல் லான்சா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தவிர்த்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிசேன தனது கருத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்வதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன ஐக்கிய பெரமுனவின் கீழ் பரந்துபட்ட கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த பிரேரணையை கருத்தில் கொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி தனியான பயணத்தை மேற்கொள்வதாக புதிய கூட்டணியில் செயற்படும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் எதிர்கால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அறியமுடிகின்றது.
வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பமான காலநிலை நீடிக்கும் எனவே கவனமாக இருக்குமாறு திணைக்களம் மக்களுக்கு வலியுறுத்துகிறது.
இதற்கு மேலதிகமாக, விலங்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்த காலநிலையை கருத்தில் கொண்டு கறவை மாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தி குறைவதை தடுக்க முடியும் எனவும் அதன் மூலம் விலங்குகளின் நீர்ச்சத்து குறைவை குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
புத்தாக்கம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பின் உச்சத்தை வெளிப்படுத்தியவாறு, இலங்கையின் மதிப்பிற்குரிய 13ஆவது National Healthcare Expo தேசிய சுகாதார கண்காட்சியான Medicare 2024 மார்ச் 01 ஆம் திகதி BMICH இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த பிரமாண்டமான ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சர், வைத்தியசர் ரமேஷ் பத்திரண பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, உள்ளிட்டோர் விசேட விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
Medicare 2024 கண்காட்சி, மார்ச் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் இடம்பெற்றது. National Healthcare Expo, Ayurveda & Herbal Expo, Medical Tourism Expo, Healthy Living Expo என 4 முக்கிய கண்காட்சிகளாக இடம்பெற்ற இக்கண்காட்சியில் பல்வேறு மருத்துவ கருத்தரங்குகள் மற்றும் வணிகம் - வணிகம் (B2B) இடையிலான தொடர்பு தளங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன. மருந்து, மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் 130 காட்சிக் கூடங்களைக் கொண்ட இந்த கண்காட்சியானது, பொது மக்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் என 10,000 இற்கும் அதிக பார்வையாளர்களை ஈர்த்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருட Medicare Expo கண்காட்சியின் பிரதான அனுசரணையாளராக Asiri Health திகழ்ந்தது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய Medicare 2024 ஏற்பாட்டுக் குழு மற்றும் ஆசிய உடல்நல மன்றத்தின் தலைவரான வைத்தியர் அமல் ஹர்ஷா, "கடந்த தசாப்தத்தில், சுகாதார அமைச்சு மற்றும் எமது அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து, இந்த நிகழ்வை இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையின் ஒரு சாராம்சம் என மாற்றியுள்ளோம். இக்கண்காட்சிக்கு அளிக்கப்பட்ட உலகளாவிய மற்றும் உள்ளூர் பாராட்டுகள், சவாலான காலங்களில் ‘Medicare 2024’ கண்காட்சியை ஏற்படுத்துவதற்கான அசைக்க முடியாத ஆதரவானது, எமது மகத்தான வெற்றிக்கு சான்றாக விளங்குகின்றது.
Medicare 2024 கண்காட்சியானது, அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒப்பற்ற மருந்துகள் தொடர்பான நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலமும், நோய்த் தடுப்பு மற்றும் நோய்ச் சிகிச்சை தொடர்பான முக்கியமான அறிவைப் பரப்புவதன் மூலமும் பங்கேற்பாளர்களைக் கவர்ந்தது. பங்கேற்ற நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள் மூலம் பல்வேறு மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த நிகழ்வு மேலும் ஒரு படி முன்னேற்றமாக அமைந்தது. அது மாத்திரமன்றி இக்கண்காட்சியானது, வணிகம் - வணிகம் இடையிலான ஒரு முக்கிய B2B தளத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு முக்கிய பங்கை வகித்திருந்தது. இதன் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச சுகாதார நிறுவனங்களுக்கு இடையே சிறந்த தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதோடு, பரஸ்பர நன்மையையும் உறுதி செய்யும் கூட்டாண்மைகளையும் ஏற்படுத்தியது.
இலங்கையின் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் பங்கேற்புடன் Aitken Spence Conventions & Exhibitions உடன் இணைந்து Asia Wellness Forum ஏற்பாடு செய்திருந்த, Medicare 2024 கண்காட்சியின் வெற்றியானது, அழியாத முத்திரையை பதித்துள்ளது. இக்கண்காட்சியின் 13ஆவது பதிப்பை ஒப்பிட முடியாத வெற்றியை நோக்கி கூட்டாக வழிநடத்தியதற்காக அனைத்து கூட்டாளர்களுக்கும் பங்குபற்றிய நிறுவனங்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர். Medicare அதன் பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதோடு, சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தையும் அது பெறுகிறது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.
அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
மேலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
அதேபோல், மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும்.
இதேவேளை இன்று ( 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணம் 21.9% குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அரசியல் அமைப்பு சபை எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெளிவாக தோற்கடிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கூறுவது சட்டவிரோதமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் உன்னிப்பாக கவனம் செலுத்தும் என அக்கட்சியின் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (04) அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ புனித ரீட்டா பரா பிரதேசங்களில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 02 விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இடத்தை நிர்வகித்த இரு பெண்களும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 32, 34 மற்றும் 35 வயதுடைய பலுகஸ்வெவ, பிடபெத்தர, அத்தகிரிய மற்றும் இரத்மலானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளது.
பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.