நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்தின் ஊடாக உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா என்பதை இன்னும் அறிவிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் குறித்த சட்டமூலம் அமுலுக்கு வரும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
ஆணைக்குழுவிடம் உரிய சட்டமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் முடிவெடுக்க முடியும் என்றார்.
இதேவேளை, இந்த சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் எடுக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.
ஆனால், இந்த மசோதாவின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், தேர்தல் 6 மாதங்கள் கூட தாமதமாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டிருப்பதற்கு இந்தியாவின் உதவியே மிக முக்கிய காரணம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஜெய்சங்கரும், அலி சப்ரியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அலி சப்ரி, ''நாங்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டுள்ளோம். இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அரசின் உதவிதான். இது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல.
அத்தியாவசியப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள் என 4 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. இந்த உதவிதான் இலங்கை ஓரளவு மீள மிக முக்கிய காரணம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய அரசுக்கு, இந்திய மக்களுக்கு இலங்கை அதிபர் சார்பிலும் இலங்கை மக்கள் சார்பிலும் ஆழமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் அளிக்க இந்தியா அளித்த உத்தரவாதமே காரணம். இந்தியாதான் முதன்முதலாக இலங்கைக்கு உத்தரவாதம் அளித்தது. அதற்காகவும் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய ஜெய்சங்கர், ''பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெளிவர எவ்வாறு உதவ முடியுமோ அதை இந்தியா உடனடியாகச் செய்தது. இலங்கைக்கு உதவும் மற்ற நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக காத்திருக்காமல் இந்தியா உதவியது. இலங்கைக்கு கடன் அளிக்கும் விவகாரத்தில், சர்வதேச அமைப்புகள் தயக்கமின்றி கடனுதவி அளித்து இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது'' என தெரிவித்தார்.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21) பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன்படி நாளை (21) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தன்னை விவாதத்திற்கு வருமாறு கூறி மற்றைய வாசலில் இருந்து ஓடியதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஏசியன் மிரர் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதுகெலும்பு இல்லாத ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியற்றவர், அவரை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் வீடியோ கீழே
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் நேற்று (18) மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த பயணத்தை நிறைவு செய்து இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி உள்ளிட்ட தரப்புகளுடன் சந்திப்பு நடத்த உள்ளார்.
பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவர் என கூறப்படுபவரும், வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் ராஜகிரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகிய சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், முகத்துவாரம், மட்டக்குளிய பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களை சிறுநீரகம் தானம் செய்வதற்கு தூண்டிய தரகர் ஒருவர் என்று மனு தொடர்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் போலியான கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை வழங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சுந்தேகநபரான் ஒரு கிராம உத்தியோகத்தர், அபுதாபி பிரஜை ஒருவருக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்த கிராம உத்தியோகத்தர், சிறுநீரகம் தானம் செய்வதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஜகிரிய பிரதேசத்தில் வசிப்பவர் எனக்கூறி போலியான சான்றிதழை வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது மிகவும் பாரதூரமானதொரு செயல் ஆகும். நீதிமன்றங்களில் பிணைக்கும் இவ்வாறான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இதன்படி, சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபருக்கு பயணத்தடை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த நபருக்கு வெநிநாட்டு பயணத்தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.
அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பிரதாப் ராமனுஜம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் கலாநிதி வெலிகம விதான ஆரச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோரே அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களாவர்.
சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பு சபை செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதுடன், தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகும்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார், இதில் சிக்கிவிட வேண்டாமென வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற புனர்வாழ்வு அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று வரிசைகள் இல்லையென்று சிலர் மகிழ்ச்சியடைகின்றனர். விலைகள் அதிகரித்ததுடன், கூப்பன் முறைகளும் கொண்டு வரப்பட்டன. இதனாலேயே வரிசைகள் இல்லாமல் போயின. ஆனால், மக்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது என்று கூற முடியாது. வாழ முடியாத நாடே இப்போது காணப்படுகின்றது.
விலைகள், கட்டணங்கள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. வரிச்சுமைகள் அதிகரித்துள்ளதுடன், வருமான வரி அதிகரிக்கப்பட்டதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சுற்றுலாத்துறை நிறுவனங்களை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இப்போது ஜனாதிபதி அரசியல் இலாபத்திற்காக தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றார். அவர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கூறுகின்றார். அனைத்து மாகாண முதலமைச்சர்களும் பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைப்பதை விரும்புவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறியுள்ளனர். அது முற்றிலும் பொய்யாகும். அவ்வாறு எவரும் அதனை கேட்கவில்லை என்றார்.
இந்த நேரத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இவ்வாறான விடயத்தில் பங்களித்து பாவத்திற்கு உள்ளாக வேண்டாம் என்று கேட்கின்றோம். 13ஆம் திருத்தம் ஊடாக அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நாடு பொருளாதாரத்தில் முதலில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும். இல்லாது அதனை நிறைவேற்றினால் நாட்டில் இனவாதம், பிரிவினைவாதம் ஏற்பட்டு மக்களிடையே குழப்பமே ஏற்படும் என்றார்
நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
மேலும், மின் உற்பத்திக்காக வாரியம் பெற்ற எரிபொருளை செலுத்தாவிட்டால், மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் நிலை உருவாகியுள்ளது.
அதற்குக் காரணம், பெட்ரோலியம் சட்டக் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை வாங்கத் தேவையான ரூபாய்கள் இல்லை.