வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான அரசியல் கலாசாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஓர் அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கிறிஸ்மஸ் வாழ்த்துத் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாகக் கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார்.
நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.
நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையைக் கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகின்றோம்.
சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகின்றோம். அந்தப் பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும்.
பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசு நாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஓர் அரசு என்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான அரசியல் கலாசாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஓர் அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் 50 மேலதிக பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
நத்தார் தினமான நாளை (25) பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐ.எஸ்.ஐ.எஸ் வெடிகுண்டுகள் மூலம் ஆளில்லா விமானத்தை கொண்டு தாக்குதலை நடத்தும் அபாயம் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்த நிலையில், அறிக்கைகளின் உண்மைகளை மறைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை முற்றாகப் பாதிப்படையச் செய்ய வேண்டும் என்ற வகையில் பொது பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளதாக மொட்டு கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
பாதாள உலக குழு மற்றும் புலிகளும் இயக்கம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றமை குறையவில்லை என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது உயிருக்கு ஏன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக 13 புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கமகே தெரிவித்தார்.
ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியின் பாதுகாப்பை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு 5 லிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பான அறிக்கையை கோரியதாகவும், அந்த அனைத்து அச்சுறுத்தல்கள் குறித்தும் அறிக்கையளித்துள்ளதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் அதிகளவில் காணப்படுவதே அவர்களைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு காரணம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. டொலவத், மகிந்த ராஜபக்சவை பாதுகாத்து வந்த இராணுவத்தினரை குறைத்தாலும் செலவு குறையப்போவதில்லை என கூறுகிறார்.
அந்த இராணுவ வீரர்கள் மீண்டும் இராணுவ முகாம்களுக்குச் சென்றாலும் அவர்களது சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்துகின்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வுகள் இடம்பெற்றவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் கண்டியில் அறிவித்தார்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜனவரி 24ஆம் திகதியுடன் முடிவடையும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (23) முதல் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை பயணிகள் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
24 மணித்தியாலங்களும் இது தொடர்பில் நாடளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் குழுவிற்கு மட்டும் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
வரிய குழந்தைகளுக்கும், அஸ்வேசும சலுகைகள் இல்லாத குழந்தைகளுக்கும் ரூ.6,000 உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 வீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டு செயலாளர் மங்கள மத்துமகே தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம் வசூலித்து தனியார் வகுப்புகளுக்கு கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சுற்றறிக்கையில் தங்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகு அல்லது வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல்வேறு வெளி இடங்களில் பணம் வசூலித்து கூடுதல் வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்கப்பட்டால், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படாமல் ஏதேனும் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை இம்மாதம் 31ஆம் தேதிக்கு முன்னதாக அந்தந்த வங்கிகளில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கணக்கு வைத்திருப்பவர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பதிலாக வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தை வழங்கி வங்கி கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையர் அல்லாத ஒருவர் செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவதன் மூலம் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இழப்பீடு பெற தேசிய அடையாள அட்டை எண் அவசியம் என மத்திய வங்கி கூறுகிறது.