கேகாலை - றம்புக்கணை பகுதியில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 13 பொதுமக்களும், 20 போலீஸாரும் அடங்குவதாக சிரேஷ்ட போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
காயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குழு, பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொள்ளவுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள சிசிடிவி காணொளிகள், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
மரண பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதி போலீஸ் மாஅதிபர் கூறுகின்றார்.
என்ன நடந்தது?
இலங்கையில் எரிபொருள் விலை நேற்று முன்தினம் இரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், றம்புக்கணை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட எரிபொருளை, பழைய விலைக்கு விநியோகிக்குமாறு வலியுறுத்தி, நேற்று (19) அதிகாலை 1 மணி முதல் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது, நேற்று மாலை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
றம்புக்கணை பகுதியை ஊடறுத்து செல்லும் ரயில் மார்க்கத்தை மறித்து, மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு போலீஸார், போராட்டக்காரர்களுக்கு கோரியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த எரிபொருள் கொள்கலன் (பவுசர்) ஒன்றை பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட, போராட்டக்காரர்கள் முயற்சித்துள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.
இதன்போது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வராமையினால், குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எரிபொருள் கொள்கலன் எரியூட்டப்பட்டிருக்கும் பட்சத்தில், றம்புக்கணை பகுதியே தீக்கிரையாகியிருக்கும் என அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அதனால், ஏற்படவிருந்த சேதங்களை குறைக்கும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 42 வயதான கே.டி. லக்ஷான் உயிரிழந்துள்ளார்.
உறவினர்கள் கண்ணீர்
பின்னவல பகுதியிலுள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகளுக்கு உணவு வழங்கும் தொழிலையே, உயிரிழந்த நபர் செய்து வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே தனது மருமகன் போராடியதாக உயிரிழந்த நபரின் மனைவியின் தாயார் தெரிவித்தார்.
''நேற்று காலை சென்றார். பின்னர் வந்தார். அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். மீண்டும் மாலை பெட்ரோல் நிரப்ப செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். எமக்கு பொய் சொல்லி விட்டு, அங்கு தான் சென்றார். நாடு, இனம் என்பதற்காக செல்ல வேண்டும் என கூறினார். பெட்ரோல் நிரப்பி வருகின்றேன் என கூறியே சென்றார். சென்ற வேளையிலேயே இது நடந்துள்ளது. உயிரிழப்பதற்கே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்."
உயிரிழந்த கே.டி.லக்ஷானுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
"இந்த இருவரையும் எப்படி பாடசாலைக்கு அனுப்புவது. பாடசாலைக்கு சீருடை வாங்கு தருமாறு மகன் கூறினார். அம்மாவுடன் சென்று வாங்குமாறு கூறி வங்கி அட்டையையும் வழங்கி விட்டே சென்றார். நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே அவர் போராடினார். பொய் சொல்லி விட்டேனும் செல்வார். நாங்கள் நாலு பேரும் இனி எப்படி வாழ போகின்றோம்?" என உயிரிழந்த நபரின் மனைவியின் தாய் கண்ணீருடன் கருத்து தெரிவித்தார்.
எரிபொருள் கொள்கலனை எரியூட்ட போராட்டக்காரர்கள் முயற்சித்ததாக போலீஸார் கூறும் கருத்தை, பிரதேச மக்கள் நிராகரித்திருந்தனர்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்படும் வரை போராட்டக்காரர்கள் எந்தவித சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கவில்லை என அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அசார்டீன், தெரிவித்தார்.
கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே, இந்த அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
எனினும், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட முயற்சித்தமையே, துப்பாக்கி பிரயோகம் நடத்த காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், நியமிக்கப்பட்ட குழு அனைத்து விதமான சாட்சியங்களையும் பெற்று விசாரணைகளை நடத்தி, உண்மையை கண்டறிந்து நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 327 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள்களை விற்பனை செய்தாளும் தினசரி நட்டத்தை எதிர்நோக்குகிறது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ,குறைந்த குறுக்கீடுகளுடன் மின்சார விநியோகத்தை பராமரிக்க நாங்கள் தொடர்ந்து எரிபொருள்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் ,எவருக்காவது எரிபொருள் விலையைக் குறைக்க முடியுமாயின் அமைச்சுப் பதவியை அவர்களுக்கு வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார் .
லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் (IOC) கலந்துரையாடியதாகவும் எதிர்காலத்தில் இரண்டு நிறுவனங்களின் எரிபொருள் விலையை சமமான அளவுகளில் அதிகரிப்பதற்கான சூத்திரத்தை கடைப்பிடிக்க உடன்பாடு ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என இலங்கையின் நீதித்துறை மருத்துவதுறை தொழில்வல்லுனர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
நீதித்துறை மற்றும் மருத்துவதுறையை சேர்ந்த கரிசனை மிக்க தொழில்வல்லுநர்கள் - நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கைகக்கான திசை-தேசத்திற்கான சுயாதீன தொழில்வல்லுநர்கள என்ற அமைப்பின் கீழ் ஒன்றுகூடினர்.
பின்வரும் விடயங்கள் குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது.
அனைத்து இலங்கையர்களும் எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார சமூக துயரங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் முன்வைக்கப்படும் வேண்டுகோள்களிற்கான காரணம்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக சட்டமொழுங்கு முற்றாக சிதைவடையக்கூடிய சூழ்நிலை அதன் காரணமாக நாட்டில் குழப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு
இலங்கையின் அரசமைப்பு கட்டமைப்பிற்குள்ளும் சட்டத்திற்குள்ளும் இந்த பாரதூரமான நிலைமைக்கு தீர்வை காண்பதற்காக எடுக்கப்படவேண்டிய உடனடிநடவடிக்கைகள் குழுவினர் பின்வரும் தீர்மானத்திற்கு வந்தனர்.
பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.
1.பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும்( சபாநாயகருக்கான அறிவித்தல் மூலம் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு அரசமைப்பின் 38 (1 )(b)பிரிவு இடமளிக்கின்றது )
2.புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படவேண்டும்( முடிவடையாத பதவிக்காலத்திற்காக நாடாளுமன்றத்தை சேர்ந்த ஒருவரை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அரசமைப்பு இடமளித்துள்ளது. 40 - (1) (a)
3.புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதும் பிரதமர் பதவி விலகவேண்டும்.( சபாநாயகருக்கான அறிவித்தல் மூலம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு அரசமைப்பின் பிரிவு இடமளிக்கின்றது. பிரதமர் பதவி விலகியதும் அமைச்சரவை கலைக்கப்பட்டதாக கருதப்படும்)
4.புதிய பிரதமரின் தலைமையில் 18 முக்கிய அமைச்சுகளிற்கான அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களை உள்ளடக்கிய இடைக்கால – காபந்து அரசாங்கம் பதவியேற்கவேண்டும்.
- ஒரு வருடத்திற்கு செயற்படலாம்.
- இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறுகின்ற நபர்கள் குறிப்பிட்ட அமைச்சரவை பொறுப்புகளை ஏற்பதற்கான உரிய கல்விதகுதிகள் -விசேட திறமைகள் கொண்டவர்களாக காணப்படவேண்டும்,அவர்கள் அதிஉயர் நேர்மை கொண்டவர்களாக விளங்கவேண்டும்.
- இடைக்கால அரசாங்கத்தில் தொழில்சார் வல்லுனர்கள்- மிக நேர்மையான நிபுணர்கள் அங்கம் வகிப்பதற்கு எற்ற விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும்.
- காபந்து இடைக்கால அரசாங்கத்தின் காலத்தில் முன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக 20வது திருத்தத்தை கைவிடுவதற்கும் உரிய மாற்றங ;களுடன் 19 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குமான முயற்சிகள் இடம்பெறவேண்டும்.
ரம்புக்கனையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸாருக்கு குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் (IGP) C.D விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ரம்புக்கன சம்பவத்தைத் தொடர்ந்து, 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுப்பதற்காக பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாக பொலிஸ் மா அதிபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்படக்கூடிய பெரும் சேதங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிசார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை அறிய பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறினார்
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக தேவையான திருத்தங்களுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சியை வெற்றியடையச் செய்வதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
"இந்த நாட்டில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி என்பது கண்ணுக்குத் தெரியும் பிரச்சினைகள் மற்றும் அந்த பிரச்சினைகளில் இருந்து பல சொல்லப்படாத பிரச்சினைகள் எழுகின்றன. நாடு அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. "இது அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக கலங்கிய நீரில் மீன்பிடிக்கும் நேரம் அல்ல" என்று பிரதமர் கூறினார்.
இந்த நிலையை சமாளிக்க அரசு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றார். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"இந்த சூழ்நிலையை சமாளிக்க நிதி நிர்வாகம் மிகவும் முக்கியமானது. எனவே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நிபுணர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக IMF, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். ஆக்கப்பூர்வமான பதில்களைப் பெறுகின்றோம் கூடுதலாக இந்த சூழ்நிலையில் இருந்து வெளியேற நட்பு நாடுகள் எங்களுக்கு உதவுகின்றன.
இந்த பிரச்சினையை வழமைக்கு கொண்டு வருவதற்கு நிதியமைச்சர், நிதியமைச்சு, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இத்தருணத்தில் மக்களின் சிரமங்களைப் போக்க குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதே எமது பொறுப்பாகும். "எனவே எதிர்க்கட்சிகள் போராட்டங்களை மீண்டும் தொடங்குவதை விட இந்த முயற்சிக்கு உதவ வேண்டும்," என்று பிரதமர் கூறினார்.
சரியான நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாததே நீண்ட நேரம் மின்வெட்டுக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த கால முடிவுகளில் தவறு காண்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் பிரதமர் மேலும் கூறினார். அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். மலையகத்தில் போதிய மழைப்பொழிவு காணப்படுவதாலும், அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதாலும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எல்பிஜி மற்றும் எரிபொருள் பிரச்சினை சில வாரங்களில் தீர்க்கப்படும் என்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், வரிசை கலாச்சாரம் மாற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரம்புக்கன சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை இதனூடாக பாதிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
கலவர பூமியாக மாறிய கேகாலை ரம்புக்கன பொலீஸ் பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிமா நிறுவனத்தின் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் விற்பனை முகவர்களுக்கு தேவையான கோதுமை மா தொகையை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ கிராமுக்கு மேலதிகமாக 40 ரூபாயை வைப்புச் செய்யுமாறு நிறுவனம் விற்பனை முகவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விலை அதிகரிப்புடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் சில்லறை விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கும் என விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலை மேலும் 20 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் ஏனைய கோதுமை மா சிற்றுண்டிகள் 10 ரூபாவால் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 450 கிராம் பாண் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் அதன் விலை 130 ரூபாக அதிகரிக்கும். கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், வெதுப்பக உணவு தயாரிப்புகளுக்கான ஏனைய மூலப் பொருட்களின் விலைகளும் 70 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரம்புக்கன பகுதியில் மக்கள் வீதிக்கு இறங்கி வாகனங்களை மறித்து டயர்களை எரித்து ரயில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் சில படங்கள் வருமாறு,