8 அன்று லிபர்ட்டி வளைவு அருகில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சிலர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மின்சாரம் தடைபடுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருள் மற்றும் உலை எண்ணெய் பெறப்பட்டுள்ளதாகவும், வார விடுமுறை நாட்களில் மின் வெட்டு மணித்தியாலங்கள் குறைவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தை பிரயோகம் தொடர்பில் கலந்துரையாடுமாறு சபாநாயகரிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததை அடுத்து பாராளுமன்றம் ஐந்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
SLPP பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாசஸ்தலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
சில எம்.பி.க்களின் மோசமான நடத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான வி ம்பத்தை உருவாக்கியுள்ளது என்று முன்னாள் பிரதமர் கூறினார்.
"ஒட்டுமொத்த நாடும் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை சரியாகச் செய்ய முடியாவிட்டால், இந்த அமர்வை இடைநிறுத்துவது நல்லது. அவர்கள் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிவரும் " என்று அவர் கூறினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன சபையை ஐந்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தினார்.
புத்தாண்டு காலத்தில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தொலைதூர சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியவற்றின் ஆதரவுடன் போக்குவரத்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில், கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும், பின்னர் அது ஏப்ரல் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விடுமுறைக்கு வருபவர்கள் கொழும்புக்குத் திரும்புவதற்கு வசதியாக இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்வதற்காக சுமார் 172 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12 முதல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கை 296 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், கொழும்பில் இருந்து ஏப்ரல் 15 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயணிகளை ஏனைய மாகாணங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 578 தனியார் பேருந்துகள் நிஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் பதவியை எவரும் பொறுப்பேற்க விரும்பாத காரணத்தினால் நான் நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்பட்டேன் என அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுவதால், யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை. நான் என்ன சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற நிதி அமைச்சராக இருந்து தேவையானதை செய்ய தயாராக இருக்கிறேன்,'' என்றார்.
"நான் அரசியலில் எனது கடைசி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் ஆனால் நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்," என்று அவர் கூறினார்.
“அதிகமான டாலர் வருவாயை உறுதி செய்வதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்துவதே இன்றைய தேவை. ஆளும் கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் SLPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்” என்றும் அவர் கூறினார்
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை விடுத்தார்.
பிரதி சபாநாயகராக தொடர்ந்து நீடிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இரண்டு நிபந்தனைகளை முன்வைப்பதாக சியம்பலாபிட்டிய எம்.பி. கூறினார்.
ஏப்ரல் இறுதி வரை மட்டுமே பிரதி சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்வதாகவும், அதுவரை பிரதி சபாநாயகர் பதவிக்கான சலுகைகள் எதனையும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் காபந்து அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வது மற்றும் அண்டை நாடுகளுடன் பொருளாதார மட்டத்தில் மேற்கொள்ளவுள்ள இராஜதந்திர ஒப்பந்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.
எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் கூட ´கோ ஹோம் கோட்டா´ என இன்று கோஷம் எழுப்புகின்றனர்.
எனவே, அராஜக ஆட்சியை முன்னெடுக்காமல், ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் நேற்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பழனி திகாம்பரம் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மலையகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்து மீட்டெடுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களும், இந்த அராஜக ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காக வீதியில் இறங்கிவிட்டனர்.
நாட்டில் எல்லா பகுதிகளிலும் அரச எதிர்ப்பு அலையே வீசுகின்றது. கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும்பாடு பட்டவர்களும், அணிதிரண்டு வாக்களித்தவர்களும், ´கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டும்´ என்பதை திட்டவட்டமாக இடித்துரைத்துவருகின்றனர். ஆனால் மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் ஜனாதிபதியும், ஆட்சியாளர்களும் அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள்கூட இன்று அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்கள் மக்கள் பக்கம் நின்று இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாளையே அமைச்சு பதவி கிடைத்துவிட்டால், மக்களை படுகுழிக்குள் தள்ளிவிட்டு ´பல்டி´ அடித்துவிடுவார்கள். எனவே, இந்த ஜனாதிபதியும், அரசும் வீடு செல்லும்வரை போராடுங்கள். நாம் உங்களுக்கு துணையாக நிற்போம்." - என்றார்.