web log free
December 17, 2025
kumar

kumar

எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பேருந்து கட்டண அதிகரிப்புக்கு நிகராக புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.

இதேவேளை இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 17 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

60 வகையான மருந்துகளின் விலை திருத்தத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் இன்று ஒரு துரதிஷ்டமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்தை இனியும் இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து ஆட்சியை விட்டு வெளியேறி, இந்த நாட்டை ஆளக்கூடிய ஒரு குழுவைத் தேர்தல் ஊடாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. 
 
மறுபுறம் ரஷியாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்  அறிவித்துள்ளார்.
 
ஆக்கிரமிப்பு ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என்று தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் உக்ரைனில் உள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் பைடன் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பூரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2010-2014 வரை அவர் வீடமைப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பிலும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அப்போது அரச பொறியியல் கூட்டுத்தாபனம் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இருந்தது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனங்கள் பல முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொறியியற் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்தக் காலப்பகுதியில் தனது உறவினர்களுக்கு வீடுகளை வழங்கியதாக வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில நேற்று (14) பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

அங்கு அவர் அரசாங்கத்தில் ஒரு குறிப்பிட்ட நபரைத் தேடினார், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா, நன்றாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

அவர்தான் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்ற இவ்வேளையில் சாகர காரியவசம் வாய்மூடி இருப்பதை கம்மன்பில வெளிப்படுத்தினார்.

புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே பதவி விலக வேண்டும் என சாகர காரியவசம்  ஏன் இன்னும் கடிதம் எழுதவில்லை என அவர் கேள்கி எழுப்பினார்.

தான் எரிசக்தி அமைச்சராக இருந்தபோது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பரிந்துரையின் பேரில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போது, மொட்டுக்கட்சி பொதுச் செயலாளர் காரியவசம் உடனடியாக பதவி விலகுமாறு தமக்கு கடிதம் எழுதியதாக கம்மன்பில நினைவு கூர்ந்தார்.

தற்போது டீசல் ஒரு லீற்றர் 55 ரூபாவால் அதிகரிக்கப்படும் போது  காரியவசம் உயிருடன் இருந்திருந்தால் அவ்வாறான கடிதம் எழுதப்பட்டிருக்கும் என கம்மன்பில குறிப்பிட்டார். 

இக்காலத்தில் சாகர காரியவசம் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் கம்மன்பில சொன்ன கதையில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிகிறது.

மட்டக்களப்பு – கரடியனாறு, ஈரளக்குளம் குடாவெட்டை வயலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(14) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வென்னப்புவ – வயிக்கால பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகப்புத்தகத்தின் (Facebook) ஊடாக தெரிந்துகொண்ட குழுவினர் போதைப்பொருட்களுடன் விருந்துபசாரமொன்றை முன்னெடுப்பதாக வென்னப்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அனுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த 2 கிராம் 110 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் ஹஷீஸ் போதைப்பொருள், 27 கிராம் கஞ்சா மற்றும் 15 போதைவில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம்(16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாக்தாத்-ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க துாதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இது குறித்து, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

 
latest tamil news

இந்த ஏவுகணைகள், அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டுள்ளன.எனினும், இந்த தொடர் தாக்குதல்களில் யாருக்கும் எந்த பாதிப்பும்ஏற்படவில்லை; உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கட்டடங்கள் மட்டும் சேதமடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தாக்குதலில், அமெரிக்க துாதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு 'டிவி' சேனல் அலுவலகமும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு, அமெரிக்காவும் ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd