கொழும்பு: கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஏழு வருட காலப்பகுதியில், இலங்கை நிலக்கரி நிறுவனம் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்ததில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக ரூ.414 கோடிக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசேட கணக்காய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் எரிசக்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கோரிக்கைக்கு அமைவாக, 2009 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் இலங்கை நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த விசேட கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிதி இழப்புக்கு பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் காண வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிதி இழப்புகள், மேலதிக செலவுகள் மற்றும் வருமான இழப்புகள் ஏற்படாத வகையில் நிலக்கரி கொள்முதல் நடைமுறையை முறையாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான அளவு நிலக்கரியை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை குறைந்த உற்பத்தித் திறனில் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை குறித்தும் கணக்காய்வு அறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட மேலதிக செலவு ரூ.1,250 கோடி என அமைச்சின் செயலாளர் கணக்கிட்டிருந்ததாகவும் விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலக்கரி கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட நிதி இழப்புகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.




