புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், படிப்படியாக மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% வரை குறைப்பதுடன், தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சுமார் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இணைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது விரைவாக முன்னெடுக்கக்கூடிய தொழில்நுட்பமாக மின்கல (Battery) தொழில்நுட்பம் காணப்படுவதால், அதனை அறிமுகப்படுத்தி, பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இரவு நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் விரைவாகத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் அதிகளவு சூரிய சக்தி இணைக்கப்படுவது நாட்டிற்கு மிகப்பெரிய சாதனையாக அமையும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் பகல் நேரத்தில் மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் செலவைக் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.




