முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தாம் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்கூட்டிய பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (05) இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன், தாம் கைது செய்யப்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனைகளின் கீழாவது பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எதிர்மனுதாரராகவும், ஷிரந்தி ராஜபக்ஷ மனுதாரராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




