புதிய மெட்ரோ (Metro) பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பேருந்துகள் அரச சொத்துகள் என்பதால், அவற்றுக்குச் சேதம் விளைவிப்போருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றம் தொடர்பில் ஏற்பட்ட இழப்புகள் மதிப்பிடப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் இணைந்து திட்டமிட்டுச் சதித்திட்டத்தின் அடிப்படையில் இச்செயற்பாட்டில் ஈடுபடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இச்சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




