இலங்கையில் நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நிதி மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழை (TIN Certificate) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.
இதன்படி, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்குகளை ஆரம்பித்தல்.
- கடன் அட்டைகளைப் (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல்.
- மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல்.
- மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல்.
- கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல்.
- காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்.
- வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல்.
- இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் சந்தர்ப்பங்களில், பங்குகளைப் பெறுபவர் மற்றும் பங்குகளைப் பரிமாற்றம் செய்பவர் ஆகிய இருவரும் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களைச் செயல்படுத்தும் அதிகாரிகள், உரிய TIN சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழிச் சேவை மூலம் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், அதன் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தவும் முடியும்.
அதிகாரப்பூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாக, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி உறுதிப்படுத்தல் பதிவின் அச்சுப் பிரதியையும் உரிய நடவடிக்கைகளுக்காகச் சமர்ப்பிக்க முடியும்.
இலங்கையில் வரி அடிப்படையை விரிவுபடுத்துவதையும், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




