– பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போதைய சூழலில் இலங்கைக்குத் தேவையில்லை எனப் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
1979ஆம் ஆண்டு வடக்கில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் தெற்கிலும் ஆயுதமேந்திய அரசியல் இயக்கங்கள் உருவாகியிருந்த போதிலும், தற்போது எந்தவொரு பிரதான அரசியல் இயக்கமும் ஆயுதமேந்திய அரசியலில் ஈடுபடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சில முஸ்லிம் குழுக்களின் செயற்பாடுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படலாம் என்றாலும், அவற்றுக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பேராசிரியர் தேவசிறி வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்காகப் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும், இத்தகைய சட்டங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் 2022ஆம் ஆண்டைப் போன்ற மக்கள் எழுச்சிகளே இடம்பெறுகின்றன என்றும், அவ்வாறான மக்கள் எழுச்சிகளை இத்தகைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான ஒருவர் என்ற வகையிலேயே இந்தக் கருத்தைத் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி காணொளியொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.




