– திஸ்ஸ அத்தநாயக்க
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டில் உருவாகி வரும் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தற்போது ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கம் நாட்டில் மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள அரச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பாரியளவிலான மக்கள் ஒடுக்குமுறையை முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுத்து நிறுத்தக்கூடிய அரசியல் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் சில உள்முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்பட்டாலும், 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளும் ஒரே அரசியல் மேடையில் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நபர்கள் நாட்டில் தவறான கருத்துகளைப் பரப்ப முயற்சித்தாலும், அவை குறித்து தாம் பெரிதாகக் கவலைப்படுவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




