தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச சேவைக்கு சுமார் 40,000 பேர் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நியமனங்கள் அரசியல் தலையீடுகளின்றி, தகைமைகளின் அடிப்படையிலும் வெளிப்படையான நடைமுறையின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறையின் அபிவிருத்திக்காக 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசாங்கத்தின் மொத்த செலவினத்தில் 12 சதவீதத்துக்கும் அதிகமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 4,570க்கும் அதிகமான பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகை (Smart Board) வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 6,000க்கும் அதிகமான பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அரச சேவையின் மதிப்பைக் குறைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சிக் காலத்தில் அரச துறைக்கான நியமனங்களின்போது பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“அரசியல் பரிந்துரைகளின் அடிப்படையில் நாம் எந்தவொரு நியமனத்தையும் வழங்கவில்லை. அரச துறைக்கான அனைத்து நியமனங்களும் கடுமையான தகைமை அடிப்படையிலும் போட்டிப் பரீட்சைகள் ஊடாகவுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரச ஊழியர்கள் அவர்களது கல்வித் தகைமைகளின் அடிப்படையில் நியமிக்கப்படும்போதுதான், அவர்களால் கௌரவத்துடனும் சுயாதீனமாகவும் தமது கடமைகளை நிறைவேற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.




