பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (11) கூடவுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் இரு தினங்களில் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எஞ்சிய 10 அமைச்சுப் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய இரு கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி உருவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, அமைச்சரவை முப்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் இருபது பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 10 அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பத்து அமைச்சுப் பதவிகளுக்கும் கடும் போட்டி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சி.பி.ரத்நாயக்க, ஜனக பண்டார தென்னகோன், விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சமகி ஜன பலவேகவின் திரு ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என ராஜித சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சுகாதார அமைச்சராக இருக்கும் ரம்புக்வெல்ல இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சமகி ஜன பலவேகவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
12 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வௌி மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வௌி மாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, 11, 12 , 13 ஆகிய தினங்களில் மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய நடத்தையை கண்காணிக்கும் அதேவேளையில், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் என்று Economic Times தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் தேவேந்திர முனையை அண்மித்த பகுதியில் இந்த திட்டம் நிறுவப்படவுள்ளது.
சீன அறிவியல் அகடமியின் Space Information Research Institute இதற்கு தலைமை தாங்குவதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன.
தேவேந்திர முனையில் இருந்து தென்மேற்கே 1700 கிமீ தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறன் உத்தேச ரேடாருக்கு இருப்பதாகவும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின் படி, ரேடார் அமைப்பு சீனாவால் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், அது முன்மொழியப்பட்ட ரேடார் வரம்பிற்குள் உள்ள இந்திய இராணுவ மையங்களை மோசமாக பாதிக்கும்.
இலங்கையில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சீன கண்காணிப்பு மையம் அதன் கிழக்கில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் எல்லையில் செயற்பட முடியும்.
சமூக ஊடகங்களில் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சமூக பாதுகாப்பு சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சகம் இந்த சமூக பாதுகாப்பு சட்டத்தை (ஆன்லைன் பாதுகாப்பு சட்டம்) முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மூன்று வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிபுணர்களின் உதவியுடன் நீதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவால் இந்த மசோதா தயாரிக்கப்பட்டது.
முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தலைமையில் இந்த சட்டமூலம் கொண்டுவர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவருக்குப் பின்னர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகமும் இந்திய திட்டமொன்றை கோரியுள்ளதாகவும், அதற்கு வெளியில் இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இந்த விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதற்கிடையில், மூன்று சர்வதேச நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகம், விற்பனையை வழங்க அரசாங்கம் கடந்த வாரம் முடிவு செய்தது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது தொடர்பிலான சட்ட நிலைமைகள் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு வருகின்ற நிலையில், அதனை பொருட்படுத்தாது செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் ராஜித சேனாரத்ன, அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மேலும், சேனாரத்னவின் செயற்பாடுகள் தொடர்பில், அவருக்கு எதிராக கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்தன.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ராஜித்த சேனாரத்னவினால் தாங்களும் அழைக்கப்பட்டதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இப்போதும் அக்கட்சியின் அமைப்பாளர்கள் பலர் ராஜித சேனாரத்னவை பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்க அழைப்பதில்லை.
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (08ஆம் திகதி) நண்பகல் 12.12 அளவில் பெம்முல்ல, திஹாரிய, புப்புரஸ்ஸ, தெரிபஹ, வடினாகல மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்...
அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மட்டக்களப்பு - சிறிதளவில் மழை பெய்யும்
கொழும்பு - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
திருகோணமலை - சிறிதளவில் மழை பெய்யும்
மன்னார் - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
(வளிமண்டலவியல் திணைக்களம்)
பேராதனை முருதலாவ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியையான 25 வயதுடைய திருமணமாகாத யுவதி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கழுத்தை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனை முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய அஞ்சலி சாப்பா செவ்வந்தி ஜயவீர என்ற முன்பள்ளி ஆசிரியையே உயிரிழந்துள்ளார்.
காலை முன்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவள் வீட்டிலிருந்து 750 மீட்டர் தூரம் கூட செல்ல முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து அஞ்சலியின் தாயார் கூறுகையில், தனது மகள் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே அவரது காதலன் தொலைபேசி அழைப்பெடுத்து அஞ்சலி விபத்தில் சிக்கியதாக கூறினார்.
“சுமார் 7.15க்கு வீட்டை விட்டு கிளம்பினாள். அவளுடைய காதலன் போன் செய்தான், அம்மா அஞ்சுவுக்கு ஏதோ பிரச்சனை. நெக்லஸ் தருகிறேன் என்று கூறக் கேட்டேன், சென்று பாருங்கள் என்று சொன்னார். பழைய காதல் உறவு இருந்தது. அவர் ஏதாவது தொந்தரவு செய்கிறாரா என்று அடிக்கடி கேட்பேன். என்னிடம் கூறப்படவில்லை” என்றார்.
பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்த அவர், உள்ளூர்வாசிகளின் தலையீட்டில் இலுக்தென்ன மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அஞ்சலி சிறிது நேரத்தில் இறந்தார்.
பேராதனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், அஞ்சலியின் தங்க நகையை திருட வந்த நபரே இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அஞ்சலியின் சகோதரி தெரிவித்துள்ளார்.
“செயின் கொடுத்தால் குத்தாதே என்று போனில் கேட்டோம். அதனால்தான் அவனைத் திருடன் என்று நினைக்கிறோம்..." என்றார்.