நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும் 3 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமது கட்சியுடன் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதுதொடர்பான அறிக்கை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (11) சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது 98 அமெரிக்க டாலர்கள் மற்றும் 28 காசுகளாக விலை உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் (10) பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 96 டாலராக இருந்தது.
டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15ஆம் திகதி இரவுகளில் கண்டிப்பாக திருத்தம் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்னும் 4 நாட்களில் இந்த நாட்டில் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அனேகமாக அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும்.
இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு பல்வேறு வழிகளில் செய்திகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் பலமானவர்கள் ஊடாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அறியமுடிகிறது. மேலும் சிலர் ஜனாதிபதியிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மாவட்ட அபிவிருத்தித் குழு தலைவர் பதவிகளை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
அது தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துக்கள் நியாயங்கள் எங்களிடம் கேட்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட பிரச்சினைகளாக பல விடயங்களை சந்தித்து கொண்டிருக்கின்றர்கள், அது தொடரபில் நாங்கள் டலஸ் அழகபெருமவிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கூறி இருக்கின்றோம்.
அரசியல் கைதிகளுடைய விடுதலையில் முதற் கட்டமாக ஒரு சிறு தொகையினரையாவது விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் காணி விடுவிப்பிலும் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான எமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை ஏற்பட்டால், அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து பரிசீலிக்க முடியும்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன? ஏன் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும் ? இது ஒரு கண்துடைப்பாகும் என்று தெரிவித்த அவர், மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும் என்றார்.
இலங்கையினுடைய பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும். பொருளாதார பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது.
எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பாக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார்.
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவுக்கு பொருளாதாரம் தொடர்பான சக்திவாய்ந்த பதவியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக டொலர்களை ஈட்டக்கூடிய வலுவான பொருளாதார அபிவிருத்திக் குழுவொன்று தயாரிக்கப்பட்டு அதன் தலைவர் பதவி தம்மிக்க பெரேராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு தம்மிக்க பெரேரா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக சஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கருத்து வேறுபாடுகள் வலுப்பெற்றுள்ளன.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், கூட்டாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியில் உள்ள பெருந்தொகையானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இத்தருணத்தில் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும், இல்லையேல் தமது அரசியல் மக்களால் நிராகரிக்கப்படும் எனவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் சிரேஸ்ட குழுவும் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதில்லை என கட்சி தீர்மானித்தால் அவர்கள் தனிப்பட்ட மட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இறுதிப் போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரை தியாகம் செய்தேனும் போராட்டத்தில் வெற்றிபெறுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தில் அதிஉயர் நிலையாக பீல்ட் மார்ஷல் பதவியை வைத்துக் கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் சரத் பொன்சேகா செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
15 வயதுடைய சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிடோகம பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு வருடத்திற்கு முன்னர் சந்தேக நபருடன் காதல் உறவை வைத்திருந்ததாகவும், சிறுமியின் தாய்க்கு அது பிடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாய் கூலி வேலைக்குச் சென்றதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பு தனது காதலன் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் உடலுறவு கொண்டதாகவும், பின்னர் பல சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டதாகவும் சிறுமி அளித்த வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சைக்காக நாச்சதுவ வைத்தியசாலைக்கு சென்ற போது சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுநீர் மாதிரியை எடுத்து பரிசோதித்து சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிடோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீன இராணுவ கப்பல் விடயத்தை வெளிவிவகார அமைச்சு கையாண்டமை தொடர்பில் பல கவலைகள் எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜூன் 28 ஆம் திகதி கப்பலை அனுமதிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜூலை 12 ஆம் திகதி ஒப்புதல் வழங்கப்பட்டது என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இருப்பினும் ஜூலை 14 அன்று வெளிவிவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கப்பலின் பயணம் குறித்து அமைச்சர் அறிந்திருக்கவில்லையா என்றும் கேள்வியெழுப்பினார்.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
கப்பல் வருவதற்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் கப்பலுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சீனக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் போது, கப்பலில் உள்ள ஊழியர்களுக்கான உணவுத் தேவை குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
ஏனைய நாடுகளின் கப்பல்களில் செல்வாக்கு செலுத்தி இலங்கை அதிகாரிகள் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டினார்.