web log free
May 06, 2025
kumar

kumar

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் திட்டமொன்றுக்காக முதலீடு செய்ய முன்வந்த ஜப்பானிய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இந்த குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் மூலம் நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து சுதந்திரமான விசாரணையை கோரினார். 

மருத்துவ வதிவிட விசா என்ற பிரிவின் கீழ் இலங்கைக்கு வந்து காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக இணையத்தில் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்ட பிரித்தானிய பிரஜையான பெண் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

kayzfra5er என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ஃபேஸ்புக் கணக்கு மூலம் அவர் போராட்ட பதிவு உள்ளிட்ட வீடியோக்களை பரப்பியது தற்போது தெரியவந்துள்ளது.

போராளிகளின் தலைக்கு பாதுகாப்பு தரப்பினர் கைத்துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாகவும் அவர்கள் அழுதுகொண்டே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவ்வாறான நடவடிக்கை நாட்டிற்கு தேவையில்லை என்றும் நாட்டை மாற்ற ஒன்றிணையுங்கள் என்றும் மேற்குலக நாடுகளுக்கு கூறி இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சையாளராக மருத்துவ வதிவிட விசா பிரிவின் கீழ் 2019 ஆகஸ்ட் 14 முதல் பிரித்தானிய விசாவை நீடிப்பதன் மூலம் நீர்கொழும்பு மற்றும் மாலபே ஆகிய இடங்களில் அவர் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விசா நிபந்தனைகளை மீறும் வகையில் செயற்பட்டமைக்காக அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் விசாவை மேலும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் கனேடிய பழமைவாதக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர், சமாதானம் நிலவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போது உலகிலேயே மோதல் இல்லாத - மிகையான இராணுவமயமாக்கலைக்கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், 'போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்' என்று வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கனேடிய பழமைவாதக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பியேர் பொய்லியேவ்ர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தற்போது சிங்கப்பூரில் இருக்கின்ற பின்னணியில் அவரைக் கைதுசெய்யவேண்டுமென வலியுறுத்திவரும் இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையுடன் நானும் இணைகின்றேன். அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச தீர்ப்பாயத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்தி கனேடிய அரசாங்கம் முழுமையான அழுத்தத்தைப் பிரயோகிப்பதை உறுதிசெய்வேன் என்று அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் ஒருமித்துநின்று, போர்க்குற்ற விசாரணை தொடர்பான அவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித்து, 'மெக்னிற்ஸ்கி' சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு ஏற்றவாறான கனேடிய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

'தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை அடுத்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக நாம் நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கின்றோம்' என்று சுட்டிக்காட்டியுள்ள பியேர் பொய்லியேவ்ர், 'போரினால் கணவனை இழந்த பெண்களுக்கான இழப்பீட்டை வழங்குமாறும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை இல்லாதொழிக்குமாறும் நாம் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக வலியுறுத்திவருகின்றோம்' என்றும் தெரிவித்துள்ளார்.

'டொரன்டோ நகரின் வீதிகளில் 5 மீற்றர் இடைவெளியில் இராணுவ வீரர்கள் நிற்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் சமாதானம் நிலவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போது உலகிலேயே மோதல் இல்லாத - மிகையான இராணுவமயமாக்கலைக்கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. சிறுபான்மையினத் தமிழ்மக்களை ஒடுக்குவதும் தனியார் சொத்துக்களைக் கையகப்படுத்தி ஆட்சியாளர்களின் அதிகாரத்தை வெளிக்காட்டுவதுமே இதன் பிரதான நோக்கங்களாகும்' என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.

நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பொலிஸ், இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டெப்லோ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹட்டன்- பன்மூர் குளத்தில் வழுக்கி விழுந்து எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 நாவலப்பிட்டி- கெட்டபுலா அக்கரவத்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கி  பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் நேற்று (1) அம்பகமுவ- பொல்பிட்டி பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரும் அவரது பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றதாக அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அல்கொய்தா அமைப்பிற்காக சர்வதேச அளவில் தோன்றிய ஒரே தலைவராக ஜவாஹிரி அறியப்படுகிறார்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பான வீட்டில் இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜவாஹிரி தனது 71 வயதில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 

தலைமை பதவியும், நானும்! என்ற தலைப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு, 

ஆயுட்கால தலைவராக விடாப்பிடியாக நிற்காமல், வழிவிட்டு, தகுதிகொண்ட பிறருக்கும், பொறுப்பை வழங்க சுயமாகவே முன்வருவது ஒரு முற்போக்கு காரியம் என நான் நினைக்கிறேன். 

இதில், என்னை புரிந்துக்கொண்டு நேரடியாகவும், தொலை தொடர்பு மற்றும் இணைய வழிமுறைகள் மூலமும் என்னுடன் கலந்துரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

2015ம் வருடம் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்களாக நான் தலைமை பதவியில் இருக்கிறேன். 

கடைசி வரை அதில் நானே இருக்க வேண்டும் என்ற “பாரம்பரிய அரசியல்” வழமையில் இருந்து விடுபட்டு, தகுதி வாய்ந்த இன்னொருவருக்கு, இப்பதவியை பொறுப்பேற்க இடம் விட விரும்புகிறேன். 

அதற்காக, நாம் உருவாக்கிய கூட்டணியிலிருந்தோ, அரசியலை விட்டோ போகவில்லை. எனக்குள் எக்கச்சக்கமாக நெருப்பும், இரும்பும் கொட்டிக்கிடக்கின்றன. கடமைகளும் காத்திருக்கின்றன.

ஆகவேதான் கூட்டணியில் அரசியல் துறை சார்ந்த பிறிதொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மலையக தமிழ் இலங்கையர் தொடர்பில், நாம் உருவாக்கி, இப்போது நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள, அரசியல் அபிலாஷை கோரிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் முனைப்பாக செயற்பட விரும்புகிறேன்.

எனது இந்த மனக்கிடக்கையை, சமீபத்தில் நான் கலந்துக்கொண்ட ஒரு ஊடக நிகழ்வில் மனந்திறந்து மிகவும் இயல்பாக சொன்னேன். உண்மையில் செவ்வி கண்ட ஊடகரின் கேள்விக்கு பதிலாகவே என் பாணியில் இதை சொன்னேன். 

எமது கூட்டணி என்பது இரகசிய திட்டங்கள் தீட்டும், ஒரு பாதாள குழுவல்ல. ஆயுத போராட்ட இயக்கமும் அல்ல. இராணுவ இரகசியங்கள் என்று எதுவும் இங்கே கிடையாது. 

ஆகவே பொது நிகழ்வில் மக்களுடன், எனது எண்ணத்தை பகிந்து கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. 

இதுதான் ஜனநாயக பரிமாணம். இனிமேலும் அப்படியே ஆகும். இதுவே கலந்துரையாடல்களை மேம்படுத்தும். 

எனினும் இதுபற்றிய முடிவை, வேறு அனைத்து விவகாரங்களையும் போன்று, எமது அரசியல் குழுவே கூடி தீர்மானிக்கும்.  

அதேவேளை ஒருசிலரால், நல்லெண்ணத்துடனும், அரசியல் விழிப்புணர்வுடனும், இதை ஏன், பார்க்க முடியவில்லை என எனக்கு தெரியவில்லை. பார்வை அற்றவர், யானையை பார்த்து கருத்து கூறுவதை போன்று ஒருசிலர் கருத்து கூறுகிறார்கள்.     

சமகாலத்தில், இலங்கையில் தேசிய மட்டத்திலும் சரி, பிராந்திய மட்டத்திலும் சரி, எந்தவொரு அரசியல் கூட்டணியும் எம் அளவில் வெற்றிநடை போடவில்லை. பல கூச்சலும், குழப்பமுமாகவே கிடக்கின்றன. 

இந்த உண்மை சிலர் கண்களுக்கு தெரிவதில்லை. விஷயம் புரியாமல் பேசும், அரசியல் குருடர்கள் தங்களை அரசியல்ரீதியாக இன்னமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

2015 ஜூன் மாதம் எமது கூட்டணியை ஆரம்பித்த போது, இது “தேர்தல்கள் முடியும்வரைதான்”, “சில மாதங்கள் வரைதான்”, என பலர் தம் ஆசைகளை ஆரூடமாக கூறினார்கள். 

இன்று இவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு, கடந்த ஏழு வருடங்களாக கூட்டணி செயற்படுகிறது. இன்னமும் தொடர்ந்து வீறு நடை போடும். 

இப்போது, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவும் தகைமை பெற்றுள்ளது. 

2019 வரையிலான நான்கு வருட, ஆட்சிகாலத்தில் அதற்கு முன் செய்யப்படாத பல காரியங்களை செய்து முடித்தோம். இன்னமும் பல காரியங்களுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். 

கூட்டணியோடு இணைந்து செயற்படும் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் அடங்கிய ஆலோசகர் குழுவின் துணையுடன் இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக விரும்பும் மலையக தமிழ் இலங்கை மக்களது அபிலாஷைகள் என்ற ஆவணத்தை தயாரித்து, அதில் பல அரசியல் கோரிக்கைகளை தொகுத்துள்ளோம். 

இவை நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை, அடுத்த வளர்ச்சி கட்டத்துக்கு அழைத்து செல்லும் என எண்ணுகிறோம்.  

கடந்த காலங்களைவிட இன்று, தேசிய அரங்குகளில் மலையக தமிழ் இலங்கையர் என்ற அடையாளம் பெரிதும் புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல், கொழும்பில் இருக்கின்ற வெளிநாட்டு தூதரகங்களில், ராஜதந்திரிகள் மத்தியில், சர்வதேசிய அரங்குகளில், குறிப்பாக இந்திய அரசு, தமிழக அரசு தரப்புகளிலும், நாம் ஒரு வளர்ந்து வரும் தரப்பாக புரிந்துக்கொள்ளப்படுகிறோம். 

மலையகம் என்றால், அது “மலையும் மலை சார்ந்த இடம்” மட்டுமே என்ற தமிழ் இலக்கண வரையறைக்கு அப்பாலான அரசியல் வரலாற்று அடையாளம் புரிந்துக்கொள்ளப்பட்டு வருகிறது. 

மிகவும் பின்தங்கிய தோட்ட தொழிலாளர்களை கைத்தூக்கி விடும் அதேவேளை ஒட்டுமொத்த மலையக தமிழரும் தோட்ட தொழிலாளரல்ல என்ற, நமது பன்முக வளர்ச்சியை உலகம் புரிந்துக்கொண்டு வருகிறது. 

அதேவேளை வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் உடன்பிறப்புகளுடனும் நல்லுறவை முன்னைவிட அதிகம் பேணுகிறோம். இதை நாம் எமது ஒரு முன்னணி கொள்கையாக கொண்டு நடத்துகிறோம். - என்று மனோ கணேசன் கூறியுள்ளார். 

 

ஈழத்தமிழரும், மலையக தமிழரும் உள்வாங்கப்பட்டே இலங்கை தமிழ் அடையாளம் வரையறுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இதுவே எம்மை பலப்படுத்தும்.     

 

இந்த பணிகளில் எல்லாம் எனது பங்களிப்பு என்னவென்று எனக்கு தெரியும். மக்களுக்கு தெரியும். 

 

நாம் செல்ல வேண்டிய பயண தூரம் அதிகம். எனினும் திட்டமிட்டு முன்நகருகின்றோம். இந்த பயணத்தில் இன்னமும் புதியவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 

 

இந்த முற்போக்கான பின்னணியில் எனது கருத்து புரிந்துக்கொள்ளப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத்தடையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் கொண்ட அமர்வே இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 

கடல் வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டை நோக்கி செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் பலர் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகின்றமை அதிகரித்துள்ளது.  

காலி முகத்திடல் கடற்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனின் சடலமும் கடந்த வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசடி வீதி குருமன்வெளி-12 பிரதேசத்தைச் சேர்ந்த (19) வயதுடைய சசிக்குமார் கஜானணன் என்பவரே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ தினத்தன்று வழமைபோல் காலை, மதிய உணவருந்தி விட்டு வெளியில் சென்ற போது குறித்த நபரின் தாயார் அவரின் உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டின் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததனை அவதானித்த தாய் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கதவினை உடைத்து உட்சென்ற போது குறித்த இளைஞன் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதனையடுத்து தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதனை கடமையில் இருந்த வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

குறித்த இளைஞன் அதே பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவரை காதலித்து வ்ந்ததாகவும் யுவதியின் தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்ட குறுந் தகவலின் பின்னரே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd