இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 135 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இலங்கையில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஹம்பந்தோட்டை சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது
" அமைதியின்மை தொடங்கியவுடன், எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை நாங்கள் உடனடியாக நிறுத்தினோம். எந்தவொரு எரிபொருள் பவுசரையும் மக்கள் தாக்கினால், சாத்தியமான தீ பரவி குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்" எனவும் தெரிவித்தது
எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை (SLTB), புகையிரத திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாக்கப்பட்ட ஆயுதப்படைகளுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த ஒன்பதாம் திகதி அமைதியான போராட்டத்தின் மீது குண்டர்களை ஏவிய குற்றச்சாட்டின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அழைக்கப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளையும் வாக்குமூலம் வழங்க வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, மகிந்த உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடியுள்ளனர்.
முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யும் தினமான நேற்று முன்தினம், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை தாக்குவதற்காக குண்டர்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம்(11) நடைபெறவிருந்த பாராளுமன்ற கட்சிகளின் விசேட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்துதவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அது நிச்சயமற்றது என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு தீ வைக்க முயற்சித்ததாகக் கூறி கூட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டினுடைய பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லமாட்டார் என அவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறுவதாக வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
‘என் அப்பா பாதுகாப்பாக இருக்கிறார். அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்கிறார், ”என்று அவர் கூறியுள்ளார்.