பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பலமான கோரிக்கைக்கு அமைவாகவே பிரதமர் பதவி விலகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜினாமா குறித்து தற்போது அறிவிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமைக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பதவி விலகுவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை என ஒரு ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீரென அந்த பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
நேற்றைய (5) தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகத் தெரிவித்து, இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் மே 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று எதிர்கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இதனையடுத்து சபைக்கு வருகை தந்த சபாநாயகர், இன்று சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சி தலைவர்களின் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்தார். அதில் தீர்மானிக்கப்படுகின்ற அடிப்படையில் அந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலேயே சபை கூட்டப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக இன்று அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்குள் வந்த ஐக்கிய மக்கள் சக்தியினர் கோசங்களை எழுப்பினர். சபாநாயகர் இந்த இடத்துக்கு வராவிட்டால், அவரை வீட்டுக்காவலில் வைக்கவுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
சபாநாயகரை இன்று வீட்டுக்கு அனுப்பப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அ்த்துடன் போராட்டக்காரர்களை நாடாளுமன்றுக்குள் அழைத்து வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் தாம் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதியை ஒதுக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இதன்போது கோரினர் இதனையடுத்தே நிலைமையை கருத்திற்கொண்டு அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்ப்பு தீவிரமடைந்ததால் பின்னர் சபாநாயகர் பாராளுமன்றத்தை எதிர்வரும் 17ம் திகதிவரை ஒத்திவைத்தார்.
நேற்றிரவு அக்கரைப்பற்று பாலமுனை வீதித் தடுப்பில் மக்கள் குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 11 பொலிஸார் மற்றும் பொதுமக்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் மோதலாக உருவாகி சம்பவம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் போது சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் துப்பாக்கிச்சூடும் அப்பகுதியில் நடத்தியுள்ளனர்.
இதையடுத்தே இரு தரப்புக்குமிடையே மோதல் நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பசில் ராஜபக்சவை இரகசியமாக சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பசில் ராஜபக்ஷவுடன் விமல் வீரவன்ச நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமல் வீரவன்சவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அரசாங்கத்தின் சுயேச்சை உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகருக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 14 பேரும் மூன்று ஆண்டுகளுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களை குற்றமற்றவர்களாக கருதி விடுவிக்க மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், அவர்களை விடுவிக்க மாவனெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
பாராளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியை பெறுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், 40 சுயேச்சை உறுப்பினர்கள் குழு நீக்கப்படும் போது அரசாங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 ஆக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட மூவரும், சுயேட்சையாக செயற்படுவதாக தெரிவித்த அரசாங்கத்தின் பத்து பேரும் இணைந்து கொண்டால் அரசாங்கத்தின் பலம் 95 ஆசனங்களாக குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் எதிர்க்கட்சிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக 121 வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்நிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.