–எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசு நடவடிக்கை
மன்னார் படுகையில் கனிம எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் என்பது வளங்களின் களஞ்சியம். இயற்கையிடமிருந்து கிடைத்த ஏராளமான வளங்கள் அங்கு உள்ளன. உப்பு மட்டுமல்லாது, பல்வேறு கனிம வளங்களும் மன்னாரில் காணப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், தற்போது மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிம எண்ணெய் தொடர்பான ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக அண்மையில் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தற்போது நாம் ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தயாராகி வருகிறோம். அவ்வாறு ஆய்வுகள் வெற்றியடைந்தால், இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடிகளுக்கான தீர்வை உங்கள் மாவட்டத்திலிருந்தே தேடிக்கொள்ள முடியும்.”




