அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
யட்டிநுவர பிரதேசத்தின் மல்வகம்மன கிராம சேவகர் பிரிவில் தேசிய மக்கள் சக்தியின் தொகுதிச் சபைகளை நிறுவும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது சரியான திசையில் பயணித்து வருவதாகவும், எனினும் அரச இயந்திரத்தையும் பொதுமக்களையும் அந்தச் சரியான திசையில் வழிநடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியதாகவும், அதன் காரணமாக நிலவி வந்த ஊழல் மற்றும் முறையற்ற அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியில் இருந்தபோது மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத பல்வேறு பணிகளை ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பின்னர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவசரமான சந்தர்ப்பத்தில் தம்மைத் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கான ஒரு வழிமுறையையும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக WhatsApp சமூக ஊடகம் ஊடாக குரல் பதிவொன்றை அனுப்பி வைக்குமாறும், தமக்கு ஓய்வு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்தக் குரல் பதிவை பரிசீலிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




