– உலபனே சுமங்கல தேரர்
காவி உடையைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிப்பதாக, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளரும் கல்விசார் தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவருமான உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வரலாற்றில் காவி உடையைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகமானோர் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்றால், அது 159 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில்தான். பொறுப்புடன் கூறுகிறேன், காவி உடையை அணிந்து பின்னர் அதனைக் கைவிட்டவர்கள் 50-க்கும் அதிகமானோர் உள்ளனர்.
வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தன சூரியாராச்சியின் பௌத்த துறவறப் பெயர் நாகியாதெனியே உதித. 1993–1994 காலப்பகுதியில் களனி பல்கலைக்கழக பிக்குகள் மாணவர் அமைப்பின் அழைப்பாளராக அவர் செயற்பட்டார். பௌத்த சாசன பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவும் துறவறத்தைக் கைவிட்ட ஒருவராவார்.
1988–1989 காலப்பகுதியில் விகாரையின் புத்தர் அறையில் மலர் பீடத்தின் கீழ் T-56 துப்பாக்கியை மறைத்து வைத்து, காவி உடையைப் போர்த்திக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.
ஜே.வி.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் தமது சொந்தப் பிறந்த ஊரில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெறவில்லை. 1988–1989 காலப்பகுதியில் அவர்களது பதுங்கிடத்தில் இருந்தது காவி உடை மட்டுமே.
எத்தனை பேர் காவி உடையை அணிந்துகொண்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்? அதுவே காவி உடைக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு இல்லையா?
இந்தப் பெயர்ப் பட்டியலை நாம் வெளியிடுவோம். காவி உடையை அணிந்து சலுகைகளை அனுபவித்துவிட்டு, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகி அதனைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் ஞானசார தேரர் T-56 துப்பாக்கிகளை எடுத்துச் சென்று சிக்கிக்கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று (09) நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே உலபனே சுமங்கல தேரர் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.




