மக்களின் விருப்பம் அல்லது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான நிதிக் கொள்கைகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விரிவுரையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி ஏற்கனவே பல கடுமையான தீர்மானங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்காலத்திலும் தேவைக்கேற்ப இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தயங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் விருப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான தீர்மானங்களை எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம், இறுதியில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் தற்போதைய தேவைகளைக் கருத்திற்கொண்டு வரிகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும், பெரும்பாலான மக்கள் வரி அதிகரிப்பை விரும்புவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய தீர்மானங்களால் சமூகத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் உருவாகி, ஒருவித ஸ்திரமற்ற நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, வரிகளைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மக்களுக்கு முறையாகத் தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொருளாதாரக் கொள்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், வரித் திருத்தங்களை உரிய காலத்தில் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அவர், வரிகள் அதிகரிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பினர் சமூகத்தில் இருப்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பொருளாதாரத்தை ஓரளவுக்கேனும் ஸ்திரமாகப் பேண முடிந்தமைக்குக் காரணம், மக்கள் மத்தியில் பிரபலமற்றதாக இருந்தாலும் நாட்டுக்கு அவசியமான தீர்மானங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தியமையே என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.




