பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை.
பிரதமர் பதவி விலகியதும் சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக நியமித்து எதிர்கால அரசியல் தீர்மானங்களை எடுக்க கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய நாளுக்குள் தனது பதவி விலகல் கடிதத்தை தனக்கு அனுப்பி வைக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகியதும் எதிர்வரும் இருபதாம் திகதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
கடந்த பொது தேர்தலில் படுதோல்வி அடைந்து தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்சமயம் நாட்டின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்.
இலங்கை அரசியல் யாப்புக்கு அமைய ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகும் போது பிரதமர் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவில் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று கோரி மாலைத் தீவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தின் மீது பொலிசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காலிமுகத்திடலில் போராட்ட களத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை பேரணியாக சென்ற குழுவொன்று, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய வேண்டும் என கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேல் மாகாணம் முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தையும் பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜனாமா கடிதத்தை கையளித்துள்ளதாவும் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணிலை எஞ்சிய காலப்பகுதிக்கு நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவருக்கு ஆதரவளிப்பதில்லை என பெரும்பான்மை குழு தீர்மானித்துள்ளது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைத்தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிரங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.