–வைப்பு நிதி சேகரிக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை
இலங்கை மத்திய வங்கியிடம், பொதுமக்களிடமிருந்து வைப்பு நிதிகளைப் பெற்று அதற்குப் பலன் வழங்கும் தோட்ட (பிளாண்டேஷன்) நிறுவனங்களை அங்கீகரிக்கும் அல்லது ஒப்புதல் வழங்கும் எந்தவித சட்டபூர்வ நடைமுறையும் இல்லை என மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணவியல் கொள்கை விளக்க ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறான வைப்பு திட்டங்களுக்கு மத்திய வங்கியின் எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், இத்தகைய வைப்பு சேகரிப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனக் கருதப்படுகின்றன என்றும், பொதுமக்கள் அவற்றில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், தங்களது பணத்தை மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது சாத்தியமில்லையெனில் போலீசில் அல்லது இலங்கை மத்திய வங்கியில் முறைப்பாடு செய்யுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும், இத்தகைய நிறுவனங்கள் சட்டபூர்வமாக செயல்பட விரும்பினால், நிதி நிறுவனமாக பதிவு பெறுவதே ஒரே வழி என்றும், அதற்கு மாறாக பொதுமக்களிடமிருந்து வைப்பு நிதிகளைப் பெறுவது இலங்கையில் முழுமையாக சட்டவிரோதமானது என்றும் டாக்டர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.



